அரசு துறைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே சாலைகளில் இந்த நிலைக்கு காரணம்! பொதுமக்கள் வேதனை!!

 

-MMH

 கோவையில் பெரும்பாலான ரோடுகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கு, மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணமென்று தெரியவந்துள்ளது. கோவை மாநகரின் முக்கியமான ரோடுகளில், ஒரே நேரத்தில் பாலங்கள் கட்டும் வேலைகள், பாதாள சாக்கடைத் திட்டம், 24x7 குடிநீர்த் திட்டம், வீடுகளுக்கான பைப் லைன் காஸ் திட்டம், புதை மின் வடம் என ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வளர்ச்சிப் பணிகளுக்காக, ரோடுகள் தோண்டப்படுவதும், அதனால் மக்கள் அவதிப்படுவதும் வழக்கமாக நடப்பதுதான்.ஆனால் அரசுத்துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால்தான், அனைத்து வளர்ச்சிப் பணிகள் நடப்பதிலும் அசாத்தியமான தாமதம் ஏற்பட்டு வருகிறது.                           கோவையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை, குடிநீர் வடிகால் வாரியமும், 24x7 குடிநீர்த் திட்டப் பணிகளை சூயஸ் நிறுவனமும், வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் இணைப்பு வழங்கும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனமும் செய்து வருகின்றன. இவற்றுக்காக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி ரோடுகள் மாறி மாறி தோண்டப்படுகின்றன.

பாதாள சாக்கடைப் பணிகளை, மிகவும் தாமதமாகச் செய்து வருவதாக, குடிநீர் வடிகால் வாரியம் மீது, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் எங்களுக்கு அனுமதி தரவே, தாமதம் செய்து விட்டனர்; எங்கள் ஒப்புதலின்றி, ரோடு சீரமைப்புக்கு டெண்டர் விட்டு விட்டு, ஓராண்டில் முடிக்க வேண்டிய பணிகளை ஒன்பது மாதங்களில் முடிக்கச் சொல்கின்றனர் என்று, வாரிய அதிகாரிகள் வருத்தப்படுகின்றனர்.

சூயஸ் நிறுவனம், பணிகளை மிகவும் மெதுவாகச் செய்து வருவதாக மாநகராட்சி கவுன்சிலர்கள் பலரும், ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும், மண்டலக் கூட்டங்களிலும் புகார்களைக் குவிக்கின்றனர். இவ்வாறு, மாநில அரசுகளின் துறைகளுக்குள்ளேயே, சரியான தகவல் பரிமாற்றமும், ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால் சீரமைக்கப்பட்ட ரோடுகள் மீண்டும் தோண்டப்படுகின்றன; குதறப்பட்டுள்ள ரோடுகள், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கின்றன.             இவை ஒரு புறமிருக்க, கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு, குழாய் மூலமாக காஸ் வினியோகிக்கும் திட்டத்துக்கு, 230 கி.மீ., துாரத்துக்கு இரும்புக்குழாய்கள் பதிக்கும் பணியை, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதலுடன், இந்தியன் ஆயில் நிறுவனம் செய்து வருகிறது. கோவை நகரில் குறிச்சி, மலுமிச்சம்பட்டி, கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த பணிக்கு, மூன்று மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஓராண்டாகியும் பணிகளை முடிக்கவில்லை என்று, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குமுறுகின்றனர். இதனால் மருதமலை ரோடு, கவுண்டம்பாளையம்-இடையர்பாளையம் ரோடுகளைச் சீரமைக்க டெண்டர் விட்டும் பணிகளைத் துவக்க முடியவில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், பணிகள் முடியுமென்று, ஐ.ஓ.சி., அதிகாரிகள் உறுதியளித்த இடங்களிலும், இன்னும் பணிகள் முடிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே சீரமைப்புக்கு டெண்டர் விட்டு, பாதாள சாக்கடைப் பணியைத் துவக்க முடியாமலிருக்கும் சுந்தராபுரம்-மதுக்கரை ரோட்டிலும், குழாய்களைப் பதிக்கும் பணியைத் துவக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஐ.ஓ.சி., அனுமதி கோரியுள்ளது. அது துவக்கப்பட்டால் எப்போது முடியுமோ என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். அரசுத்துறைகளுக்குள் நடக்கும் இந்த மோதல்களால், ரோடுகள் சீரமைக்கப்படாமல், மழைச்சேறில் விழுந்து எழுந்து, கோவை மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வேகப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், அதன் வாயிலாக, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், கோவை மாவட்ட நிர்வாகத்தின் கைகளில்தான் உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments