மலைப்பாதையில் விபத்து! சென்னையில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

 

-MMH

 கல்லட்டி மலைப்பாதை என்றாலே மிகக் கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்று அந்த பாதை வழியாக சென்று வந்த அனைவருமே சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம்.ஆனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஆபத்தை உணராமல் விபத்தில் சிக்குவது தான் வேதனையாக உள்ளது.

ஊட்டி அருகே கல்லட்டி மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார்; 17 பேர் காயமடைந்தனர். சென்னையில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 14 ஆண்கள், 4 பெண்கள் என, 18 பேர் டெம்போ டிராவலர் வேனில், நேற்று காலை சென்னையில் புறப்பட்டு, இரவு ஊட்டி வந்தனர். கல்லட்டியில் உள்ள ரிசார்ட்டில் தங்க, ஊட்டியிலிருந்து இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு சென்றார். தலைகுந்தா போலீஸ் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கல்லட்டி மலைப்பாதையில் டெம்போ டிராவலர் வேன் செல்ல அனுமதியில்லை என தடுத்துள்ளனர்.

 


கல்லட்டியில் உள்ள தனியார் ரிசார்ட் ஊழியர்கள் இருவர், பைக்கில் வந்து அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வதாக போலீசாரிடம் கூறி, அவர்களை வேனில் அழைத்து சென்றனர்.கல்லட்டி மலை பாதையில், 15வது கொண்டே ஊசி வளைவில் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதி நின்றது. தகவலறிந்த புதுமந்து போலீசார் சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இதில், திருநெல்வேலி சேர்ந்த ஐ.டி., ஊழியர் முத்துமாரி 24 பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். காவல்துறையினர் எவ்வளவுதான் எச்சரித்தாலும் ஏதாவது ஒரு சரியான காரணத்தைச் சொல்லி அனுமதியைப் பெற்று மலைப் பாதையில் சென்று விடுகின்றனர்.

சரியான அனுபவம் இல்லாதவர்களோ அல்லது  மலைப்பாதையில் வண்டியை இயக்க பழக்கம் இல்லாதவர்களோ இந்தப் பாதையில் வண்டியை இயக்குவது மிகவும் கடினம் என எவ்வளவோ செய்திகளை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் அப்படி இருந்தும் இதுபோன்ற விபத்துகள் நடந்து கொண்டிருக்கிறது என்றால் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் கொடுக்கும் எச்சரிக்கையை அறிவுரையை மீறுவதால் தான்.

பொதுவாக நமக்கு பழக்கமில்லாத தெரியாத இடங்களுக்குச் செல்லும் பொழுது அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையையோ அறிவுரையையோ ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே நிதர்சனமான உண்மை. விழிப்புடன் இருப்போம் விபத்தை தடுப்போம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments