பல்வேறு தடைகளை மீறி டாஸ்மாக் கடை திறக்க முயற்சி! பொதுமக்கள் அதிர்ச்சி!!

    -MMH 

     கோவை மாவட்டத்தில் சுமார் 295 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் சில கடைகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த சூழ்நிலையில் 

கோவை அரசு கலைக் கல்லுாரிக்கு மிக அருகில், டாஸ்மாக் மதுக்கடை வைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதையும் மீறி, அந்தக் கடையைத் திறப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் பகீரத முயற்சி செய்து வருகின்றனர். 

கோவையில் சமீபகாலமாக மக்களின் எதிர்ப்பையும் மீறி குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மதுக்கடை வைப்பதற்கான முயற்சிகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது மக்களின் எதிர்ப்பால் வீரகேரளம்- சிறுவாணி ரோட்டில் குடியிருப்புப் பகுதியில் இருந்த மதுக்கடை அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் மதுக்கடை வைப்பதற்கு, தற்போது தீவிரமான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேபோல ரயில்வே ஸ்டேஷன் எதிரில் கீதா ஹால் ரோட்டில் கடந்த ஆட்சியில் ஐகோர்ட் உத்தரவின்படி அகற்றப்பட்ட மதுக்கடையை, அதற்கு அருகிலேயே வேறொரு இடத்தில் அமைக்கவும் முயற்சி நடக்கிறது. இந்த ரோட்டில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் மதுக்கடை நடந்து வந்தது. அந்தக் கடையினால் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்ட காரணத்தால் அந்தக் கடையை காலி செய்யுமாறு, கட்டட உரிமையாளர் சார்பில், டாஸ்மாக் நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.அத்துடன், ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைக்கும், அரசு கலைக்கல்லுாரிக்கும் மிக அருகில் இருப்பதால் பல விதங்களிலும் பாதிப்பு ஏற்படுமென்று காரணங்கள் விளக்கப்பட்டன. அதை ஏற்று, அந்த கடையை இடம் மாற்ற கோர்ட் உத்தரவிட்டது. அப்போதிருந்த கலெக்டரும் அதற்கான ஆணை பிறப்பித்தார்.அதன்படி, அங்கிருந்த மதுக்கடை (எண்:1611) வேறு பகுதிக்கே மாற்றப்பட்டது. 

இப்போது கீதா ஹால் வாசலுக்கு அருகிலுள்ள, தனியார் கல்யாண மண்டபத்தில் அதை அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. முன்பிருந்த இடத்தை விட, இப்போது மதுக்கடை அமையவுள்ள இடம், அரசு கல்லுாரியின் பிரதான வாசலுக்கு மிகஅருகில் உள்ளது.

அரசு மருத்துவமனையின் பின்புற வாசலில் இருந்து வெறும் 40 அடி துாரத்திலேயே, இந்த கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இதனால் மதுக்கடையை அங்கே அமைக்கக்கூடாது என்று, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சேரன் டவர்ஸ் குடியிருப்புவாசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். பொது மக்களின் ஆட்சேபம், மாணவர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மதுக்கடை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவே கூடாது என்பதுதான், மக்கள் மற்றும் மாணவர்களின் ஒருமித்த கோரிக்கை ஆகும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments