வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கேமராக்கள் பொருத்தும் திட்டம்! செயல்படுத்த மலையோர கிராம மக்கள் கோரிக்கை!!

 -MMH 

யானை வரும் பாதை துல்லியமாக அறிந்துகொள்ள, கிடப்பில் போடப்பட்ட கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை வடக்கு பகுதியில் மலையோர கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, கோவை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாலும், வனவிலங்குகளின் ஊடுருவலை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. கடந்த சில நாட்களாக மீண்டும் வன விலங்குகளின் நடமாட்டம் மலையோர கிராமங்களில் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் சின்னதடாகம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒற்றை யானையின் நடமாட்டம் இருந்தது. கோவை வன ஊழியர்களின் உதவியோடு, அதை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன்பு கணுவாய் நர்சரி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் இருந்தது. கோவை வனத்துறையினர் அதை மருதமலை அடிவாரம் நோக்கி விரட்டினர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில்; மலைப்பகுதியில் காட்டு யானைகள் வரும் பாதையில், கேமராவை பொருத்தி நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் காட்டு யானைகள், தங்களுடைய பாதையில் வருவதை தெரிந்து கொள்ள முடியாமல் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது. யானைகள் வரும் பாதையில் கேமிராவை பொருத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், கோவை.

Comments