மோசமான நிலையில் சாலை! ஊர்வலமாய் வாகனங்கள்!! மக்களின் கதி?

 

-MMH

மருதமலை ரோட்டில், குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட குழி, சரியாக மூடப்படாத காரணத்தால், பாதி ரோட்டைப் பயன்படுத்த முடியாமல், வாகனங்கள் ஊர்வலமாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் சிரமத்துடன் பயணித்து, மருதமலை முருகனை தரிசிக்க வரும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். கோவை, மருதமலை ரோட்டில் பி.என்.புதுார் பகுதியில், ஏற்கனவே ரோடு மிகவும் குறுகலாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், இங்கு ரோடு விரிவாக்கம் செய்த போது, ஒரு சில தனியார் கட்டடங்களைக் காப்பாற்றுவதற்காக, இப்பகுதியில் முறையான நில அளவை செய்யப்படாமல் போதிய அளவில் அகலப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. அதற்குப் பின், ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது. இதனால், பி.என்.புதுார் பஸ் ஸ்டாப் பகுதியிலுள்ள அகலம், மருதமலை ரோட்டில் போகப்போக குறுகலாகி விடுகிறது. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

 இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், 24 x 7 குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக, இதே பகுதியில் ரோட்டோரத்தில் குழாய்கள் பதிக்க, குழிகள் தோண்டி மூடப்பட்டன. ஆனால் தோண்டப்பட்ட குழிகள், முறையாக மூடப்படவில்லை. அதன் மீது ரோடும் போடப்படவில்லை.தற்போது பெய்து வரும் மழையில், கனரக வாகனங்கள் சென்றால், அந்தக் குழிக்குள் இறங்கிவிடும் அபாயம் உள்ளது. ரோட்டுக்கும், அதையொட்டிய குழிகளுக்கும் பெரும் உயர வித்தியாசம் இருப்பதால், சிறிய வாகனங்களும் அதில் செல்வதில்லை. எல்லா வாகனங்களும் தார் ரோடு உள்ள பகுதியில் மட்டும் செல்வதால், ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பகலிரவாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மெயின் ரோட்டில் மட்டுமின்றி, இதையொட்டியுள்ள அனைத்துத் தெருக்களிலும் ஒரே நேரத்தில் இந்த பணிக்காக ரோடுகள் குதறப்பட்டு, எந்த ரோட்டிலுமே பயணிக்க முடியாத நிலை உள்ளது.

மெயின் ரோட்டை, மாநில நெடுஞ்சாலைத்துறையும், வீதிகளில் உள்ள ரோடுகளை, மாநகராட்சி நிர்வாகமும் சீரமைக்க வேண்டும். ஆனால் மழைக்காலத்திலும் அதைச் சரி செய்யாத காரணத்தால், ஏராளமான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, பி.என்.புதுார் 41வது வார்டுக்குட்பட்ட மக்கள், எந்த மாற்று வழியிலும் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதி கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மழை வலுக்கும் முன்பாவது, போர்க்கால அடிப்படையில் இந்த ரோடுகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது, இவ்விரு துறை அதிகாரிகளின் பொறுப்பு. அதற்குரிய முயற்சிகளை எடுப்பது, இந்த பகுதிக்கான மக்கள் பிரதிநிதிகளின் கடமை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments