ரூ.2 கோடி மதிப்பிலான சேதுபதி அரச குடும்பத்தின்‌ பெண்‌ சிலை மீட்பு!!

    -MMH 

சாத்தான்குளம்‌ அருகே ரூ.2 கோடி மதிப்பிலான சேதுபதி அரசு குடும்பத்தின் பெண் சிலையை சிலை தடுப்பு பிரிவின் மூலம் மீட்கப்பட்டது. 400 ஆண்டுகளுக்குமேல் பழமையான ஐம்பொன் சிலையை சாத்தான்குளம் ஆறுமுகராஜ், குமரவேல் ஆகியோர் விற்க முயன்றுள்ளனர். தனிப்படையினர் சிலை வாங்கும் நபர்களை போல் நாடகமாடி சிலையை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி உறையூரை சேர்ந்த முஸ்தபா என்பவர் சிலையை விற்க தரகராக செயல்பட்டது அம்பலம் ஆனது.

தூத்துக்குடி மாவட்டம்‌, சாத்தான்குளம்‌ தாலுகா, படுக்கபத்துவை சேர்ந்த பால்பாண்டி மகன்‌ ஆறுமுகராஜ்‌ மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டம்‌, சாத்தான்குளம்‌ தாலுகா, இடைச்சிவிளையை சேர்ந்த முருகேசன்‌ மகன்‌ குமரவேல்‌ ஆகியோர்‌ 400 ஆண்டுகளுக்கு மேல்‌ பழமையான ஐம்பொன்‌ பெண்‌ சிலையை பதுக்கி வைத்து ரூபாய்‌ 2 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக ரகசிய தகவல்‌ சிலை திருட்டு தடுப்பு பிரிவினருக்கு கிடைத்தது. 

இதையடுத்து சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர்‌ ஜெயந்த்முரளி மற்றும்‌ காவல்‌ துறை தலைவர்‌ தினகரன்‌, காவல்‌ கண்காணிப்பாளர்‌ சிலை திருட்டு தடுப்பு பிரிவு ரவி ஆகியோர்‌ சிலை விற்கும்‌ கடத்தல்‌ கும்பலுக்கு சந்தேகம்‌ ஏற்படாத வண்ணம்‌ சிலையை மீட்க ஒரு செயல்‌ திட்டம்‌ வகுத்தனர்‌. இதையடுத்து மதுரை சரகம்‌, கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ மலைச்சாமி அவர்களின்‌ நேரடி மேற்பார்வையில்‌ ஆய்வாளர்‌ கவிதா மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இத்தனிப் படையினரை சிலை வாங்கும்‌ நபர்களை போல அவ்விற்பனையாள்களை அணுகச்‌ செய்தனர்‌. 

மேற்படி கடத்தல்‌ கும்பலின்‌ நம்பிக்கையை பெற ஒரு வாரத்திற்கு மேல்‌ ஆனது இறுதியாக அவர்கள்‌ சிலையினை தனிப்படையினரிடம்‌ காட்ட ஒப்புக்கொண்டனர்‌. அச்சிலையின்‌ மதிப்பாக ருபாய்‌ 2 கோடி 30 லட்சம்‌ என முடிவு செய்யப்பட்டது. அப்போது மேற்படி சிலையை விலைக்கு விற்பதற்காக வைத்திருந்தவர்‌ திருச்சி மாவட்டம்‌, உறையூர்‌ மேட்டுத்தெருவைச்‌ சேர்ந்த காஜா என்பவரின்‌ மகன்‌ முஸ்தபா என்பதும்‌ மற்றும்‌ மேற்படி இருவரும்‌ சிலையை விற்பதற்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்கள்‌ எனவும்‌ தெரியவந்தது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவர்களிடமிருந்த சிலையை ஏற்கனவே பேசியபடி திருச்சியிலிருந்து மதுரை செல்லும்‌ நான்கு வழிச்சாலை பழைய திருச்சி ரோடு பிரிவு (கிராப்பட்டி ரோடு பிரிவு) சந்திப்பிற்கு தனிப்படையினர்‌ கொண்டுவர செய்தனர்‌. அப்போது அந்த 3 நபர்களையும்‌ சுற்றி வளைத்து பிடித்து மேற்படி முஸ்தபா என்பவர்‌ கருப்புநிற பேக்கில்‌ வைத்திருந்த சுமார்‌ 400 ஆண்டுகள்‌ தொன்மையான சுமார்‌ ஒரு அடி உயரமுள்ள உலோகத்திலான பெண்‌ சிலையினையும்‌ கைப்பற்றினர்‌.

மேற்படி நபர்களை விசாரித்த போது, இச்சிலையை சிவகங்கை மாவட்டம்‌ திருப்பத்தூர்‌ தாலுகா, கிளாமடத்தை சேர்ந்த நாகராஜன்‌ மகன்‌ செல்வகுமார்‌ என்பவர்‌ 400 வருடங்களுக்கு மேல்‌ பழமையான சிலை என்றும்‌ ரூபாய்‌ 2 கோடிக்கு மேல்‌ விலைக்கு போகும்‌ என்றும்‌ அந்த சிலையை விற்பனை செய்து அந்த பணத்தை நாம்‌ பிரித்துக் கொள்ளலாம்‌ என கூறி சிலையை கொடுத்ததாக கூறியுள்ளார்‌ 

மேற்படி செல்வகுமார்‌ என்பவரையும்‌ பிடித்து விசாரித்த போது அவர்‌ இச்சிலையினை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய வீட்டில்‌ இருப்பதாகவும்‌, அவருடைய தகப்பனார்‌ நாகராஜன்‌ என்பவர்‌ குறி சொல்லும்‌ தொழில்‌ செய்து வந்ததாகவும்‌, அவர்‌ 13 ஆண்டுகளுக்கு முன்‌ குறிசொல்ல போன போது சிவகங்கையை சேர்ந்த கருவாட்டு வியாபாரி அவருடைய தோப்பிலிருந்த தென்னை மரத்தின்‌ மேலே துணியில்‌ கட்டி வைத்திருந்த மேற்படி சிலையை எடுத்து தனது தகப்பனாரிடம்‌ கொடுத்ததாகவும்‌ அந்த சிலையை தனது தகப்பனார்‌ சாமி கும்பிட்டு வந்ததாகவும்‌, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அவர்‌ இறந்து விட்டதாகவும்‌ எனவே இச்சிலையை முஸ்தபா என்பவரிடம்‌விற்க சொல்லி கொடுத்ததாகவும்‌ கூறினார்‌.

விசாரணைக்கு பின் 4 நபர்கள்‌ மீதும்‌ மதுரை சரக சிலை திருட்டு தடுப்பு போலீசாரால்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்பு கூடுதல்‌ தலைமை நீதித்துறை நடுவர்‌ நீதிமன்றம்‌ கும்பகோணத்தில்‌ ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்‌.மேலும்‌ மேற்படி சிலை எங்கிருந்து திருடப்பட்டது என்பது பற்றியும்‌ அத்திருட்டில்‌ சம்மந்தப்பட்ட நபர்கள்‌ யார்‌ என்று குறித்தும்‌, சிலையின்‌ தொன்மை தன்மை குறித்தும்‌ புலன்‌ விசாரணை நடைபெற்று வருகிறது. 

தொல்லியல்‌ நிபுணர்களின்‌ கருத்தின்படி இச்சிலை சிவகங்கை பகுதியை ஆண்ட சேதுபதி அரசவம்சத்து பெண்‌ சிலை எனவும்‌ அச்சிலையின்‌ ஆபரணங்கள்‌ மற்றும்‌ ஆடைகள்‌ அரச வம்சத்துடையது என்பதும்‌ தெரிய வந்துள்ளது. இச்சிலையானது தொல்லியல்‌ மாணவர்களுக்கும்‌ ஆராய்ச்சியாளர்களுக்கும்‌ தமிழக வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்‌ எனவும்‌ நம்பப்படுகிறது. காவல்‌ துறை தலைமை இயக்குநர்‌ சைலேந்திர பாபு, சிலை திருட்டு தடுப்பு பிரிவின்‌ இந்த சிறப்பான பணியை வெகுவாக பாராட்டினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments