பெண் காவலர் லத்தியால் தாக்குதல்

வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர் மீது, சக காவலர்கள் லத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் காவலர் தாயுடன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 196 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி இன்னும் 5 நாட்களில் நிறைவு பெற உள்ளது. இங்கு பயிற்சி பெறும் காவலர்கள் ஒரு அறையில் 4 பேர் வீதம் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு அறையில் தங்கியிருந்த பெண் பயிற்சி காவலர்களுக்கு இடையே திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுரையைச் சேர்ந்த பெண் காவலரை, லத்தியால் சக காவலர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்து அவரது பெற்றோர் மதுரையில் இருந்து நேற்று காலை காவலர் பயிற்சி மையத்திற்கு வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம், 'மகளை தாக்கிய காவலர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை . பிரச்னை குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து பயிற்சி பெண் காவலர் மற்றும் அவரது தாய் இருவரும் பயிற்சி வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்து அழைத்துச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு காவல் துறை ஆய்வாளர் நாகராஜன் விசாரணை நடத்தினார். 5 நாளில் பயிற்சி நிறைவு பெற உள்ள நிலையில் பெண் பயிற்சி காவலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments