ஆடி 3 வது வெள்ளி மற்றும் ஆடிப்பூரம்

சென்னை: ஆடி 3 வது வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றன. இதனால் ஆலயங்களில், பெண்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு உகந்த திருநாள்களில் ஆடி மாதம் பூர் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப் பூரத் திருநாள் மிகவும் சிறப்பானது. தேவிக்குரிய இத்திருநாளில் சித்தர்களும் யோகிகளும் தங்களது தவத்தை துவக்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும். தாய்மை பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பு. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப் பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அன்று அம்பிகைக்கு பலவகை உணவுகளும், ஆடிக் கூழும் படைத்து மக்கள் மகிழ்வர். வளையல் வியாபாரி ஒருவர் பெரியபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது களைப்பு மேலிட அங்கிருந்த ஒரு வேப்பமரத்தடியில் படுத்து உறங்கியவர், மேலிட அங்கிருந்த ஒரு வேப்பமரத்தடியில் படுத்து உறங்கியவர், கண்விழித்துப் பார்த்தபோது, அவர் வைத்திருந்த வளையல் பெட்டியைக் காணாது துணுக்குற்றார். அன்றிரவு அம்பாள் அவர் கனவில் தோன்றி, நான் ரேணுகா பவானி! அப்பா, நீ கொண்டுவந்த வளையல்கள் என் கையை அலங்கரித்து இருக்கிறது பார்! பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தினடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் எனக் கூறி மறைந்தாள். வியாபாரி அனைவரிடமும் தாம் கண்ட கனவைப் பகிர்ந்து கொண்டு திருக்கோயில் எழுப்ப உதவினார். அம்பாளுக்கு மலர், பழம், காய்கனி, நகை, மஞ்சள், சந்தனம், குங்குமம் இதுபோன்று பல அலங்காரங்கள் நடைபெறுவது போல ஆடிப் பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் விசேஷமாக வளையல்களால் அலங்கார வைபவம் நடைபெறும். மயிலாப்பூர் கோலவிழியம்மன், முண்டகக்கண்ணியம்மன், கற்பகாம்பாள் உள்ளிட்ட ஆலயங்களில் இன்று வளைகாப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


S.GIRI


Comments