பண்ணை கீரை கோழிக்கொண்டை பூவின்

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று பண்ணை கீரை மற்றும் கோழிக்கொண்டை பூவின் மருத்துவப்பயன்கள் குறித்து அறிந்து கொள்வோம். கோழிக்கொண்டை என்ற தாவரப்பெயர் கொண்ட இந்த தாவரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மற்றொரு தாவரமான பண்ணை கீரையும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டது. முதலில் பண்ணை கீரை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள். தேவையான பொருட்கள் பண்ணைக்கீரை இலை மற்றும் பூக்கள், சீரகப்பொடி, நல்லெண்ணை , சமையல் உப்பு. செய்முறை: பண்ணைக்கீரை இலை மற்றும் பூக்களை எடுத்து நன்கு அலசி கடாயில் சிறிது நல்லெண்ணை ஊற்றி மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் அதில் ஒரு டம்ளர் அளவு நீர் ஊற்றி சிறிதளவு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர நாள்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத தீர்வு தரும். பண்ணை கீரை தேனீர் குடலுக்கு பலம் தரும். பித்தத்தை சமன்படுத்தும். தோலுக்கு பளபளப்பு தரும். வயிற்று போக்கு, காய்ச்சலை போக்கும். ரத்த விருத்தி தரும். அக்கி நோய் மற்றும் தோல் நோய்களுக்கு அரு மருந்தாக இருக்கும். மேலும் கழிச்சல், ஜீரண கோளாறுகளை போக்கும் சிறந்த மருந்தாகும். இனி கோழிக்கொண்டை பூ, இலை மற்றும் தண்டுகளை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள். கோழிக்கொண்டை பூக்கள், பனங்கற்கண்டு. செய்முறை: கோழிக்கொண்டை பூக்களை சுத்தப்படுத்தி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர பல்வேறு பிரச்னைகள் நீங்கும். கோழிக்கொண்டை என்ற பெயர் கொண்ட இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு அருமருந்தாக பயன்பட்டு எளிய தீர்வாகிறது. குறிப்பாக ரத்தக்கசிவு, ரத்த போக்கு நிற்கும். மங்கிய கண்பார்வை தெளிவு பெறும். இலைகள் வயிற்று போக்கு, சீத பேதிக்கு மருந்தாவதுடன் புழுக்கொல்லியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள நாடாபுழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் கொக்கிப்புழுக்களை கொல்லும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் இடுப்பு மற்றும் அடிவயிற்று வலியை போக்கும். அக்கிப்புண் ஏற்பட்ட பிறகு வரும் தோல்நோய்களை இந்த தேனீர் போக்கும். கோழிக்கொண்டை தாவரத்தின் விதைகளை பயன்படுத்தி தயாரிக்கும் தேனீர் அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு மற்றும் பைல்ஸ் பிரச்னையால் ஏற்படும் ரத்தப்போக்கு, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் போன்றவற்றிற்கு உடனடி தீர்வாக அமையும். இதற்கு தேவையான பொருட்கள் கோழிக்கொண்டை தாவரத்தின் விதைகள் மற்றும் பனங்கற்கண்டு அல்லது தேன். செய்முறை: ஒரு டம்ளர் அளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு கோழிக்கொண்டை தாவரத்தின் விதைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பயன்படுத்தலாம். இதனால் டயாரியா மற்றும் டிசன்ட்ரி எனப்படும் கழிச்சல், சீதக்கழிச்சல் கட்டுப்படும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நிற்கும். இப்படி நம்மை சுற்றி உள்ள பொருட்களை கொண்டும் வீட்டின் சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிதான பொருட்களை கொண்டும் பல்வேறு பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகளை தரும் நாட்டு மருத்துவ முறைகளை கடைபிடித்து பயன்பெறலாம். 


Comments