வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

கும்பல் வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு கும்பல் வன்முறை மற்றும் கொலை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு மற்றும் 11 மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்திய அமைப்பு என்ற தனியார் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதத்தின் பெயரால் நடக்கும் கும்பல் வன்முறை மற்றும் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டும் அதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மத்திய அரசும், சில மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கும்பல் வன்முறை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சகம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Comments