வாகனப் பதிவுக் கட்டணம் உயருகிறது.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிக்கும் தொகையை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும், பயன்பாட்டையும் அதிகரிக்கும் வகையிலும் வாகனப் பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய வாகனங்கள் பதிவு மற்றும் மறு பதிவிற்கான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட உள்ளன. இதன்படி இலகு ரக கார்களுக்கான பதிவுக்கட்டணம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாகன புதுப்பிப்புக் கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 50 ரூபாயாக இருக்கும் பதிவுக் கட்டணம் புதிய விதிகளின் படி ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் லாரி, டிரக், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டவரைவையும் அந்த அமைச்சகம் முன் மொழிந்துள்ளது.


Comments