TTR சில்மிஷம், கழிப்பறையில்! பெண்...

ரயிலில் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் கைது: அச்சத்தால் கழிப்பறையில் பெண் பயணித்த பரிதாபம் சேலம்: ஓடும் ரயிலில், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, டிக்கெட் பரிசோதகரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தப்ப, கழிப்பறையில், பெண் ஒரு மணி நேரம் பயணித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. மதுரை, நிலக்கோட்டையை சேர்ந்தவர் மஞ்சுளா, 26; பெங்களூருவிலுள்ள, தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவிலிருந்து மதுரை செல்ல, மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தார். காத்திருப்போர் பட்டியலின் மூலம், டிக்கெட் கிடைத்தது. பெங்களூரு ஸ்டேஷனுக்கு சென்ற அவர், அங்கு வந்து நின்ற, மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் டிக்கெட் பரிசோதகரிடம், காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளதால், இருக்கை ஒதுக்கி தரும்படி கேட்டார். அவர், மஞ்சுளாவை, குளிர்சாதன பெட்டியில் உட்காரச் சொல்ல, அவரும் அமர்ந்தார். அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், இருக்கை ஒதுக்கி கொடுத்ததோடு, மஞ்சுளா அருகில் அமர்ந்து கொண்டார். தர்மபுரி அருகே ரயில் வந்தபோது, 'நீங்கள் எழுந்து கொண்டால், நான் படுத்து தூங்குவேன்' என, டிக்கெட் பரிசோதகரிடம், மஞ்சுளா தெரிவித்தார். அப்போது அவர், மஞ்சுளாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அச்சமடைந்த மஞ்சுளா, உடனே அவரை தள்ளிவிட்டு, கழிப்பறைக்கு சென்று, கதவை சாத்திக்கொண்டு, தன் உறவினர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் கொடுத்தார். அவர்கள், ரயில்வே போலீசின் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்தனர். அங்கிருந்து, சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நள்ளிரவு, 1:50 மணிக்கு மைசூரு எக்ஸ்பிரஸ், சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் இளவரசி உள்ளிட்ட போலீசார், ரயில் கழிப்பறையில் அமர்ந்தபடி, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணித்து வந்த, மஞ்சுளாவை மீட்டனர். அவர் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்ததில், டிக்கெட் பரிசோதகர் மதுரையை சேர்ந்த சுடலைமணி, 51, என தெரிந்தது. அவரை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், போலீசார், கைது செய்தனர்.


                                                                                                                      -MMH


Comments