மோடி அடுத்த பிளான் ரயில்வே தனியார்மயம்...

சென்னையிலிருந்து பெங்களூர், கோவை, மதுரைக்கு தனியார் ரயில். புறநகரிலும் பிரைவேட் அதிரடி பிளான் சென்னை : ரயில்வே படிப்படியாக தனியார்மயமாகப்போகிறது. தமிழகத்திலும் தனியார் ரயில் இயக்கம் இன்னும் 4 வருடங்களில் அறிமுகமாகப்போகிறதாம். இந்தியாவில் பயணிகள் ரயில் இயக்கத்தை முழுமையாக அரசுதான் நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசு, படிப்படியாக ரயில்வே துறையை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் இதற்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டு 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த அளவில் சென்னையிலிருந்து பெங்களூர், கோவை, மதுரை வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளிலும், தனியார் ரயில்களை அறிமுகம் செய்ய திட்டம் உள்ளதாம். எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தளவில், சென்னையிலிருந்து கொல்கத்தாவில் உள்ள ஹவுரா, மும்பை மற்றும் டெல்லி ஆகிய ரயில் நிலையங்களுக்கு தனியார் ரயில்கள் அறிமுகம் செய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எந்த வழித்தடத்தில் எல்லாம் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ, அந்த வழித்தடங்களில், தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், எகனாமிக்ஸ் டைம்ஸ் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "ரயில்வேயில் 150 தனியார் ரயில்களை கொண்டு முதல்கட்ட தனியார் சேவையை வழங்க உள்ளோம். டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா வழித்தடங்கள் மற்றும் பிற சாத்தியமான பகுதிகளிலும் இவற்றை இயக்குவோம். வழித்தடங்கள், கட்டணங்கள் மற்றும் பல விஷயங்களில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய ஒரு கட்டுப்பாட்டாளர் இருப்பார். " என்று தெரிவித்துள்ளார். உள்நாட்டு முதலாளிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களும், தனியார் ரயிலை இயக்கும் உரிமையை பெறப்போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Comments