டயர் நக்கி என்று சொன்னவர் டயர் பின்னால்

டயர் நக்கி என்று சொன்னவர் டயர் பின்னால் அதிமுக ஆட்சியில் இருப்பதால் கிடைத்துள்ள அதிகார பலம் மற்றும் பண பலத்தின் பலன்களை கூட்டணி கட்சிகள் அறுவடை செய்வதற்கு ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட எடப்பாடி, தேமுதிகவை கழட்டி விடுவது என்ற முடிவுக்கு ஏற்கெனவே வந்துவிட்டார். அதே சமயம் பாமகவை, அவர்களே கூட்டணியை முறித்துக்கொண்டு போக வைக்கும் அளவுக்கு அவர்களைத் தனது கட்சியினரை விட்டு சீண்டி விடத் தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாகவே, அண்மையில் "கூட்டணி கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு தங்களது பலத்தை நிரூபிக்கட்டும்” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். அப்போதே அதிமுகவில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் ஜெர்க்காகின. அடுத்ததாக, தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர்.சமரசம்,  டயர் நக்கின்னு சொன்னவர்களை டயர் பின்னால எடப்பாடி பழனிசாமி ஓட விட்டாருல்ல" எனத் தற்போது பேசியிருப்பது பாமகவையும் ராமதாஸ் அன்கோவையும் ஏகத்துக்கும் டென்சன் ஆகி உள்ளது. இது அன்புமணி ராமதாஸ் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் இளைஞரணிக் கூட்டத்தில், மீண்டும் தனது 'மாற்றம்... முன்னேற்றம்' கோஷத்தை கையிலெடுத்துள்ளார். நாம் இப்போது கூட்டணியில் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கிடைக்கணும். அதேநேரம் தமிழகத்தில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நம்மால்தான் நடத்திக் காட்ட முடியும். இதை யார், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். என்று பேசியிருப்பது பல்வேறு உள் அர்த்தங்களை வெளிப்படுத்துவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுக முகாமோ, 'இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்தோம்...! என ஜாலி மூடில் கமென்ட் அடித்துக்கொண்டிருக்கிறது. 


Comments