அஜீத் மீது கண் வைத்த அமித் ஷா

மும்பை நேரு அறிவியல் மையத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை நவம்பர் 22 மதியம் முதல் நடத்தினார்கள். இரவு ஏழுமணிக்கு வெளியே வந்த சரத்பவார், “சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேதான் முதல்வர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் 12 மணி நேரம் கழித்து இன்று (நவம்பர் 23) காலை எட்டு மணிக்கு மும்பை ஆளுநர் மாளிகையில் சிற்சில பேர்கள் மட்டுமே கலந்துகொண்ட பதவியேற்பு நிகழ்வில் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னவிஸும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும் சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களின் பதவியேற்பு நிமிடத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்போல பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கிறார். இன்று காலை இந்தத் தகவலைக் கேட்டு சிவசேனா அதிர்ந்துபோய் நிற்கிறது. அஜித் பவார் மராட்டிய மக்களின் முதுகில் குத்திவிட்டார் என்று சொல்கிறார் சிவசேனாவின் சஞ்சய் ராவத். சரத் பவாரோ, 'இது எனக்குத் தெரிந்து நடக்கவில்லை .அஜித் பவார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துவிட்டார்' என்று இன்று காலை சொல்லியிருக்கிறார். அஜீத் பவார் மேல் கண் வைத்த அமித் ஷா! தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே சரத்பவாரையும், அவரது மருமகன் அஜித் பவாரையும் ஊழல்வாதிகள் என்று வர்ணித்தது பாஜக. ஒருபடி மேலே போய் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் அமலாக்கப் பிரிவு கூட்டுறவு வங்கி ஊழலில் சரத்பவார், அஜித் பவார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அப்போது அஜித் பவார், 'என்னால்தான் என் சித்தப்பாவுக்கு கெட்ட பெயர்' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அழுதார். அப்போதே அமித் ஷா இவரை தனது ஹிட் லிஸ்டில் டிக் செய்துவிட்டார். பவாரின் குடும்ப பவர் மோதல்! தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிராவில் மிக வலுவான அரசியல் கட்சி. ஆனால் சரத் பவாருக்கு மகன்கள் இல்லை . அதனால்தான் தனது அண்ணன் மகன் அஜித் பவாரை அரசியலுக்கு அழைத்து வந்தார், அமைச்சராக்கினார். சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மாநில அரசியல் ஈடுபட்டால் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று அவரை மராட்டிய மாநில அரசியலுக்குள் வராமல் டெல்லி பக்கம் போக வைத்தார் அஜித் பவார். இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படார் அஜித் பவார். சரத் பவாருக்குப் பின் கட்சி யாருக்கு என்ற போட்டி, பவாரின் உடல் நலம் குன்றியபோதே ஏற்பட்டுவிட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சரத்பவார் முழுமையாக செயல்பட முடியாத நிலையில் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் கையிலெடுத்துவிட்டார் அஜித் பவார். அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதே கடுமையும் முரட்டுத் தனமுமாக இருக்கும். அப்படிப்பட்ட அஜித் பவார் பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டபோதே இவரை வைத்தே தேசியவாத காங்கிரசை முடிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார் அமித் ஷா. தேர்தல் முடிவுகளுக்குப் பின் சிவசேனாவின் முதல்வர் பதவி கேட்ட உறுதியான நிலைப்பாடால் பாஜக பதவியேற்க முடியாமல் போனது. கொஞ்சநாட்கள் முயற்சி செய்த பாஜக அதன் பின் வெளிப்படையாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை . இதை சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் நம்பிவிட்டன. நேற்று மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் கூட சிவசேனாவை பாஜக எதிர்க்கவில்லை . சரி, காங்கிரஸ்தேசியவாத காங்கிரஸ்- சிவசேனா மூன்றும் சேர்ந்துவிட்ட நிலையில் பாஜகவால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துவிட்டார் உத்தவ் தாக்கரே. அமித் ஷாவின் அண்டர் கிரவுண்ட் ஆபரேஷன்! ஆனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வெளிப்படையான எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்று தேவேந்திர பட்னவிஸுக்கு உத்தரவு போட்ட அமித் ஷா, கட்சியின் பொதுச் செயலாளரும், மகாராஷ்டிர மாநில தேர்தல் பொறுப்பாளருமான பூபேந்தர் யாதவ்வை அழைத்துப் பேசினார். கடந்த பத்து நாட்களுக்கு முன் நடந்த இந்த சந்திப்பில் பூபேந்தர் யாதவுக்கு அமித் ஷா கொடுத்த ஆபரேஷன் தான், 'அஜித் பவார் ஆபரேஷன்'. அஜித் பவார் மீது நீர்பாசன ஊழல், கூட்டுறவு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அஜித் பவார் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போலத்தான் இருந்தது. அந்த வழக்கு பற்றிய அத்தனை ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு அஜித் பவாரிடம் பேசினார் பூபேந்திர யாதவ். ஊடகங்களுக்குத் தெரிந்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ்காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்தது என்றால் பூபேந்தர் யாதவ்- அஜித் பவார் பேச்சு ரகசியமாகவே நடந்தது. 'தேசியவாத காங்கிரஸின் சட்டமன்றத் தலைவர் நீங்கள்தான். கட்சியை உடைக்கவெல்லாம் வேண்டாம். இன்று பல நிர்வாகிகள் உங்களோடுதான் இருக்கிறார்கள். எனவே பாஜகவுக்கு ஆதரவு கொடுங்கள். இல்லையென்றால் கூட்டுறவு வங்கி ஊழலில் கைது செய்யப்படுவீர்கள்' என்பதுதான் பாஜக முன் வைத்த முதல் விஷயம். இன்னொரு முக்கிய விஷயம், பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால் துணை முதல்வராகலாம். தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக உங்கள் கட்டுக்குள் கொண்டுவரலாம். எங்களுக்கு சிவசேனாவை அழிக்க வேண்டும் அவ்வளவுதான்' என்பது. இந்த இரு நிபந்தனைகளுக்கும் அஜித் பவார் ஒப்புக் கொண்டுவிட்டார். நேற்று இரவு நடந்தது என்ன? நேற்று இரவு ஏழுமணிக்கு நேரு அறிவியல் மையத்தில் பேச்சுவார்த்தையில் சரத்பவாரோடு அஜித் பவாரும் இருந்தார். வெளியே வந்து உத்தவ்தான் முதல்வர் என்று சரத்பவார் சொல்லிச் சென்றார். உத்தவ் தாக்கரே தன் வீட்டுக்குச் சென்று அமைச்சரவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இரவு 9.30 மணியளவில் அஜித் பவாரின் செல்போன் அணைக்கப்பட்டது. இரவு 9.30க்கு மேல் தேவேந்திர பட்னவிஸ் ஆளுநரை சந்திக்கிறார். இரவு 12.30க்கு அஜித் பவார் ஆளுநரை சந்தித்து தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கிறார். இதையடுத்து இன்று அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிடுகிறது. வான்கடே மைதானத்தில்தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வேன் என்று ஏற்கனவே கூறியிருந்த பட்னவிஸ் அவசர அவசரமாக திருட்டுக் கல்யாணம் போல இன்று காலை எட்டு மணிக்கு ஆளுநர் மாளிகையிலேயே பத்துபேர் முன்னிலையில் முதல்வராகிவிட்டார். நவம்பர் 29 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிப்படுத்தும் சுப்ரியா ஸ்டேட்டஸ்! இன்று காலை சரத்ப்வாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், 'குடும்பமும் கட்சியும் உடைகிறது' என்று வைத்திருக்கிறார். இதுபற்றி அவரது அலுவலகத்தில் தொடர்புகொண்டு கேட்டபோது, 'ஆமாம். மேடத்தின் கருத்து இதுதான்' என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத் பவாரின் குடும்பமும் உடைவது உறுதியாகிவிட்டது. அஜித் பவார் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதால் அவரது தரப்புக்கே தேர்தல் ஆணையத்தின் சகல ஆதரவுகளும் இருக்கக் கூடும்.                                        -                                                                                                                             -நன்றி மின்னம்பலம் 


Comments