ஏன் இந்த கொந்தளிப்பு குடியுரிமை சட்டத்தில்

ஏன் இந்த கொந்தளிப்பு.? அப்படி என்ன தான் திருத்தப்பட்டது குடியுரிமை சட்டத்தில்.! உங்கள் பார்வைக்கு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்கள் தற்போது போர்க்கோலம் பூண்டுள்ளன. நாட்டில் உள்ள எதிர் கட்சிகள் பலவும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதாவிற்கு வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளன. மிகவும் சென்சிட்டிவான விவகாரமாக பார்க்கப்பட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ரத்து செய்யப்பட்ட போது, வரலாறு காணாத கலவரம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டு போர் சமயத்தில் குவிப்பதை போல படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஆனால் அங்கு ஒரு சிறிய கல்லெறி சம்பவம் கூட நடக்கவில்லை. ஒரு தோட்டா கூட வெடிக்கவில்லை. ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றவுடன் துவங்கியது நாடு முழுவதும் கொந்தளிப்பு. குறிப்பாக அசாம் மற்றும் திரிபுராவில் துவங்கியது போராட்டம். அதிலும் அசாமில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி தற்போது வரை போலீசின் தோட்டாக்களுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் மாணவ சமூகம் களமிறங்கிய பிறகு தான் போராட்டம் மிக வீரியமாகியுள்ளது. இவ்வளவு களேபரங்களுக்கு காரணமான குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து பார்க்கலாம். 


1955ம் ஆண்டு மசோதா: பொதுவாக துன்புறுத்தல் காரணமாக நம் நாட்டிற்கு அகதிகளாக வரும் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்துவது அல்லது சிறையில் அடைப்பது என்பதே நடைமுறையில் இருந்துள்ளது.


இந்நிலையில் கடந்த 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை மசோதாவில் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் குடியேறும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. அதே சமயம் நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து 11 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உரிய ஆவணங்களுடன் வசிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதேயாகும்.குடியுரிமை திருத்த மசோதா, 1955 இந்தியாவின் குடியுரிமையைப் பெறுவதற்கான 5 நிபந்தனைகளை விவரிக்கிறது


பெறுவதற்கான 5 நிபந்தனைகளை விவரிக்கிறது 1. பிறப்பால் குடியுரிமை 2. வம்சாவளியைச் சேர்ந்த குடியுரிமை 3. பதிவு மூலம் குடியுரிமை 4. இயற்கைமயமாக்கல் மூலம் குடியுரிமை 5. பிரதேசத்தை இணைப்பதன் மூலம் குடியுரிமை 1955ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவின் படி, வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் இயற்கையாகவே குடியுரிமையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டது. இது பின்னர் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.


 தற்போது திருத்தப்பட்ட மசோதா:


மேற்கண்ட விதிகளை கொண்டிருந்த குடியுரிமை சட்டத்தில் தான் தற்போது மத்திய அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி அண்டை நாடுகளை சேர்ந்த ( பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம்) இஸ்லாமியர் அல்லாதோர் உரிய ஆவணங்களை வைத்திருக்காவிட்டாலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே போதுமானது. அதுவே அவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியான ஒன்றாக கருதப்படும். மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் திருத்தப்பட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


யாருக்கு சாதகம்:


திருத்தப்பட்ட இந்த மசோதாவால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத மதத்தை சேர்ந்தவர்கள் அதாவது இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற முடியும். 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் நம் நாட்டில் குடியேறிய மேற்கண்ட 6 பிரிவை சேர்ந்தவர்கள் எளிதாக இந்தியக் குடியுரிமை பெற முடியும்


கொந்தளிப்புக்கு காரணம்:


இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இந்த மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியே, வடகிழக்கு மற்றும் வடமாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்க தான் இந்த சட்டதிருத்தம் என்றால் இதில் முஸ்லிம்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிங்கயாக்களையும்மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சரமாரியாக ஆவேசமுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.


விடுபட்ட இலங்கை தமிழர்கள்:


தவிர மியான்மரிலிருந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களுக்கு இந்த சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை என கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களை கடைசி வரை அகதிகளாகவே வைத்திருக்க போகிறோமோ என்று தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.


விஸ்வரூபம் எடுக்கும் போராட்டங்கள்: நம் நாட்டின் அடையாளமே வேற்றுமையில் ஒற்றுமை எனும் மதச்சார்பின்மை தான். ஆனால் இந்தியாவின் வேரையே சிதைத்து விடும் இந்த மசோதா என கூறி அசாம், திரிபுரா, டெல்லி, உத்திரபிரதேசம் என நாட்டின் பல பகுதிகளில் போராட்ட தீ பரவி வருகிறது. அதிலும் பல இடங்களில் மாணவ சமுதாயம் களமிறங்கியுள்ளதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.


திருத்தம் செய்யுமா மத்திய அரசு:


வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களின் அச்சத்தை நீக்க சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியோ கொந்தளிப்பு அடங்கி கூடிய விரைவில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.                                            -MMM


 


 


Comments