எமலோக பயணம்


ற்கொலைக்கு தீர்வு...... தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா... உடனே கோவை - பொள்ளாச்சி சாலையில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஆம்! இனி தற்கொலைக்கு பதிலாக நித்தம் நித்தம் கொலை என்ற காட்சி அரங்கேறுமோ என்ற அச்சம் பொள்ளாச்சி சாலையைக் கடக்கும் பொதுமக்களுக்கு எழுந்து வருகிறது. எதிரே வருவது எமனா பேருந்தா என்ற மரண பீதியில் மக்கள்.. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளைப் பிடித்து கொலைக் குற்றவாளிகள் போல் விசாரித்து அவர்களுக்கு தண்டனை தரும் நமது காவல்துறை அதிபயங்கரமாக பேருந்துகளை ஓட்டி வரும் ஓட்டுனரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்னவோ! தற்கொலை பயணச் சாலையாக மாறிவரும் பொள்ளாச்சி சாலையை ஏன் இவர்கள் கண்டுகொள்வதில்லை?


சென்னையை சென்று அடையும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் லேசர் வேக கருவி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 100 கி.மி வேகம் கடந்தால் ருபாய் 400 அபராதம், மீண்டும் ஒரு முறை வேகம் அதிகரித்தால் ருபாய் 1000 அபராதம். இதை அருகில் உள்ள சுங்கசாவடியில் வசூலிக்கப்படும். ஆகவே இனி கவனமாக செல்லவும் என்பது இன்றைய செய்தி.



அதிக வேகம் ஆபத்து! மிதவேகம் என்றுமே மகிழ்ச்சி எனும் அடிப்படையில் வரவேற்க வேண்டிய செய்திதான். அந்த நடவடிக்கை சென்னையை விட போர்க்கால அடிப்படையில் செயல் படுத்தப்பட வேண்டிய முக்கிய இடம் இந்த கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைதான். கோவையின் தெற்குப் பகுதியில் உள்ள பொள்ளாச்சி - கோவை நெடுஞ்சாலையில் அசுரகதியில் கடந்து செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர்களைப் போன்ற ஆபத்தான ஓட்டுநர்கள் நாட்டில் வேறெங்குமே இருக்க முடியாது. எப்போதுமே அவர்கள் அப்படித்தான் என்றாலும் இப்போது இதை அச்சேற்ற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி வரலாம். கிணத்துக்கடவிலிருந்து பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் மலுமிச்சம்பட்டியில் இடப்புறம் திரும்பி ஊருக்குள் சுற்றி மதுக்கரை மார்க்கட் சாலை வழியாக சுந்தராபுரம் வந்து பின்னர் கோவையை அடைகிறது.


பிரச்சனை இதுதான். ஊருக்குள் சுற்றிவர ஆகும் காலதாமதத்தை சமன் செய்ய மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து சுந்தராபுரம் வரை பேருந்து வரும் வேகமிருக்கிறதே அது அசுரவேகம் அல்ல..... பேரசுரவேகம். அதிலும் குறிப்பாக பிருந்தாவன், பிரன்டேஷன் பள்ளிகளுக்கு இடைப்பட்ட ரயில்வே பாலத்தை பேருந்துகள் கடக்கும் ராட்சத வேகத்தை ஆங்கிலத் திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாது. இச்சாலையில் குறிச்சி ஹவுஸிங் யூனிட் , காமராஜ் நகர், அஷ்டலக்ஷ்மி நகர் உள்ளிட்ட குடியிருப்புப்பகுதிகளின் பொதுமக்கள், மேலே குறிப்பிட்ட பள்ளிகளோடு M.G.R.அரசுப்பள்ளி, பண்டிட் நேரு, விஸ்வேஸ்வரா பள்ளி மாணவர்கள், கிருஷ்ணா கல்லூரி, செங்கப்பக்கோனார் திருமண மண்டபம், அபிராமி, பாலாஜி, அபிநத் மருத்துவமனைகள் என்றிவற்றுக்கு வந்து போகும் வாகனங்கள் , நோயாளிகள்...... தொழில் நகரங்களுக்கே உரித்தான கடைகள், தள்ளுவண்டிகள் என்று எந்நேரமும் மக்கள் கூட்டம் அலைமோதும் குறுகிய சாலை இது என்று தெரிந்தும் கொலைவெறியோடு தலைதெறிக்கப் பறக்கும் இத்தனியார் பேருந்து ஓட்டுநர்களைக் கட்டுப்படுத்துமா இந்த லேசர் கருவி? எனில் உடனே அதை இங்கும் பொருத்துங்கள் - இல்லையெனில், இச்சாலையில் கடந்த மாதம் மயிரிழையில் உயிர் தப்பிய நம் நாளைய வரலாறு ஆசிரியரையும்...... இன்று என் பிள்ளையொடு தப்பிப் பிழைத்த என்னையும் காத்த கடவுள் மட்டுமே இப்பாதையில் பயணிக்கும் மக்களைக் காக்க வேண்டும்.


நாளைய வரலாறுக்காக ,


Ln.Indradevi Murugesan ,Kovai.                                                                                 -MMH


Comments