அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை


ரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாததால் தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருப்பதா என தொலைத்தொடர்பு நிறுவனங்களை நீதிபதிகள் சாடியுள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


அடிப்படையான சேவைகள் மூலம் ஈட்டும் வருவாயை மட்டும் கணக்கிட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உரிம கட்டணம் செலுத்தி வந்தன. செல்போன் விற்பனை, டிவிடென்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டுவந்த புதிய வருவாய் பங்கீட்டு முறை. இந்த கணக்கின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மனு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதன் பிறகும், புதிய வருவாய்ப் பங்கீட்டு முறைப்படி நிலுவைத் தொகையை செலுத்தாத தொலைத்தொடர்பு நிறுவனங்களை, உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.



மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த பிறகும் ஒரு பைசா கூட செலுத்தப்படவில்லை என்பதை குறிப்பிட்ட நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர், எம்ஆர் ஷா அமர்வு , தாங்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், இந்த நீதிமன்றத்தில் பணியாற்றக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டது. ஒரு பைசா கூட செலுத்தப்படவில்லை எனில், இது பணபலத்தின் விளைவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறுத்திவைத்த மத்திய அரசின் அதிகாரி யார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு அதிகாரி தன்னைத்தானே நீதிபதி என நினைத்துக் கொண்டு உத்தரவை நிறுத்திவைத்தால், இந்த நாட்டில் சட்டம் ஏதாவது எஞ்சியுள்ளதா என்று கேட்டனர். நாட்டில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் தங்கள் மனச்சாட்சியை உலுக்கிவிட்டது என மிகக் கடுமையாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிவீனத்தை உருவாக்குவது யார் என தெரியவில்லை , இந்த நாட்டில் வாழ்வதைவிட வேறு எங்காவது சென்று விடலாம் என கூறினர்.


உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைத்த, மத்திய அரசு அதிகாரி தனது உத்தரவை திரும்பப் பெறவில்லை எனில் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தனர். யார் அந்த அதிகாரி, அவர் எங்கிருக்கிறார், அவரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துங்கள் எனவும் ஆவேசத்துடன் நீதிபதிகள் கூறினர். ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், டாடா டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள் மார்ச் 17ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த தேதிக்குள் உரிய தொகையை செலுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினர்.


இதையடுத்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்று வரும் 20-ம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், டெலிகாம் நிறுவனங்களின் நிலுவைத்தொகையை நள்ளிரவு பதினொன்று 59-க்குள் செலுத்த, தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது..             -MMH


Comments