கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா


கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி திறந்துவைத்தார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரிசோதனையானது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் வைத்து பரிசோதிக்கப்பட்டு வந்தது.


 


மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி.


இது வீணான கால விரயத்தை ஏற்படுத்துவதால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் பரிசோதனை முகாம்களை துவங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தற்போது புதிதாக கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி திறந்துவைத்தார். இந்த நிகழ்வின் போது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.


பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது:


கொரோனா வைரஸ் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் கொரோனா அறிகுறிகள் தொடர்பாக சோதிக்க 27 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20 பேரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 16 பேருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது.


இதைத்தொடர்ந்து நான்கு பேரின் முடிவுகள் வர உள்ளது. அதேபோல, மீதமுள்ள ஏழு பேரின் முடிவுகள் கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சிறப்பு பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்று அவை தெரியவரும். கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் தாயார் நிலையில் உள்ளது.


மேலும், கோவையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கொரோனா அனுமதிக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுரையின்படி முழு அளவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அத்தனை வசதிகளும் உள்ளது.


அதேபோல, நேற்று சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த 118 பயணிகள் பிரத்தியேக வார்டில் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். மேலும், ஆனைகட்டி அருகே ஆயுர்வேத மருத்துவத்திற்கு வெளிநாட்டினர் வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறோம்.


மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை 22ம் தேதி பொதுமக்கள் பிரதமரின் அறிவுரையின்படி வீடுகளை விட்டு வெளியே வராமல் தனித்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


                                                                                                                       -MMH


Comments