கோவைக்கு வழியை காணோம்- தேடும் கிராம மக்கள்

      -MMH


       கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட, திவான்சாம்புதூர் ஊராட்சியில், தமிழக கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ளது பாறைமேடு கிராமம். இக்கிராமத்தில் 150 க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு வசிப்பவர் அனைவரும் விவசாயம் சார்ந்த தொழில் தான் செய்து வருகிறார்கள். தென்னை ஓலையில் இருந்து தனியாக பிரித்த சீமார் கட்டுகளை வியாபாரிகள் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களிடம் கொடுத்து விடுவார்கள் அதை நைஸ் சீமாறாக மாற்ற வேண்டும் ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் கிடைக்கும் இதை நம்பித்தான் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


அடிப்படைத் தேவைகளில் மிகவும் பின்தங்கி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் அந்தவகையில் இந்த கிராமத்தில் ரேஷன் கடை இல்லை, ஒரு சுடுகாடு இல்லை , சரியான வழித்தடம் இல்லை , என தொடர்கிறது நீளமான பட்டியல்.


இது குறித்து அங்கு வசிக்கும்  சரவணகுமார், கூறுகையில் :


ரேஷன் கடை


இப்பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ரேஷன்கடை இக்கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தான் களத்துபுதூர் என்ற பகுதியில் ரேஷன் கடை உள்ளது என்றாலும் தமிழ்நாட்டில் தான் இவர்களது கிராமம் உள்ளது தமிழ்நாட்டில் தான் ரேஷன் கடையும் உள்ளது என்றாலும் பொருட்களை வாங்க சில கிலோமீட்டர் கேரளாவுக்குள் பயணம் செய்து தான் வாங்கி வர வேண்டும் என்கிற சூழ்நிலை நிலவுகிறது மேலும் இவர்களுக்கு வேறு வழித்தடம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.



சுடுகாடு


இறப்புக்கு பின்பு உடலை அடக்கம் செய்ய இடம் அனைவருக்கும் தேவை அந்தவகையில் இந்த கிராமத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது சுடுகாடு ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்த இவர்களுக்கு தமிழ்நாட்டில் அடக்கம் செய்ய இடம் இல்லை என்பது வேதனையான செய்தி அண்டை மாநிலமான கேரளாவில் மூலக்கடை என்ற பகுதியில் தான் இவர்களுக்கு சுடுகாடு உள்ளது பல பிரச்சனைகளை கடந்து தான் அங்கு அடக்கம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வழித்தடம்


வீட்டுக்கு வீடு வாசப்படி வேண்டும் அதேபோல ஒவ்வொரு ஊருக்கும் வழித்தடம் என்பது மிகவும் அவசியமானது அந்தவகையில் இந்த பாறைமேடு கிராமத்தில் வழித்தடம் என்பது கேள்விக் குறியாகத்தான் உள்ளது சில மீட்டர் தொலைவில் தான் மெயின்ரோடு என்றாலும் அது கேரளாவுக்குள் இருக்கும் மெயின் ரோடு ஆகும் இந்த வழியாகத்தான் இவர்கள் ஒவ்வொருநாளும் பயணித்து வருகிறார்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழகத்திற்குள் செல்ல ஒரு சில கிலோமீட்டர் கேரளாவுக்குள் பயணம் மேற்கொண்டால் மட்டுமே தமிழகத்துக்குள் வரமுடியும் என்பது உண்மை அடிக்கடி கேரளாவில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஸ்ட்ரைக் நடைபெறும் அந்த சமயத்தில் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான்.



 எங்கள் கிராமம் அடிப்படைத் தேவைகளில்  மிகவும் பின்தங்கியுள்ளது குறிப்பாக இங்குள்ள குழந்தைகள் படிப்புக்காக திவான்சாம்புதூர் தான் செல்ல வேண்டும் கேரளா பஸ்ஸில் தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் தினந்தோறும் பேருந்து கட்டணம் கொடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என்பது கேள்விக் குறியாகத்தான் உள்ளது.


இந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஊரடங்கு தொடரும் நிலையில் இங்கு உள்ள கர்ப்பிணிப் பெண்கள் முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்லவும் மற்றும் வீட்டுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்க செல்லவும் கேரளா போலீசிடம் அனுமதி பெற்று செல்வது என்பது மிகவும் கடினமாக உள்ளது என்றார் மேலும் அங்கு ஒரு சிலரிடம் விசாரித்த போது எங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வழித்தடம் என்பது அவசியமாகிறது இங்கிருந்து சரியாக ஒன்றை கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது மீன்கரை மெயின் ரோடு அந்த ரோட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும் மேலும் எங்கள் பகுதியில் சுடுகாடு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்கள் இப்பகுதியில் உள்ள மக்களின் ஒருமித்த குரலாகவும் இந்தப் பதிவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கொங்கு மண்டலத்தின் கோட்டையாக இருக்கும் கோவையில் இப்படிப்பட்ட அவலநிலையில் வாழ்ந்து கொண்டுருக்கும் இந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய யாரும் வரமாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர் இந்த கிராம மக்கள்.அரசு நடவடிக்கை எடுக்குமா....? 


-சுரேஷ்குமார் பொள்ளாச்சி.   



Comments