புலம்பெயர் பெண்- நிறைமாத கர்ப்பிணியின் சோகம்.

      -MMH


பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து பீகாரில் உள்ள சொந்த மாநிலத்திற்கு நடந்தே சென்று கொண்டிருந்த போது புலம்பெயர் தொழிலாளியின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிறந்த பெண் குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.


லாக்டவுனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வருகிறார்கள். ஒரு பக்கம், பசி, பட்டினியால் வாடுகிறார்கள், மறுபக்கம் நடந்தே சொந்த மாநிலம் செல்லும் போது விபத்துகளில் சிக்கி பலியாகிறார்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜத்தின் ராம் மற்றும் பிந்தியா தம்பதி. இவர்கள் பணி நிமித்தமாக பீகாரிலிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு பணியாற்றி வந்தனர், இந்த நிலையில் பிந்தியா கர்ப்பம் அடைந்தார். இதனிடையே லாக்டவுன் நடவடிக்கையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் பணமுமில்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்துகள் இயங்காததால் சைக்கிளிலும் நடந்தும் சிலர் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.சிலர் வாடகை வாகனங்கலில் பயணம் மேற்கொண்டனர் ,அது போல் ராம் - பிந்தியா தம்பதியும் கையில் பணமில்லாமல் லூதியானாவில் அவதிப்பட்டு வந்தனர். அம்பலாவுக்கும் யமுனாநகருக்கும் சிலர் வாடகை வாகனங்களை அமர்த்தியும் சிறப்பு ரயில்களிலும் பயணம் செய்து வருகிறார்கள். அது போல் சிறப்பு ரயில்களில் ஊர் செல்ல ராம் - பிந்தியா தம்பதி முன்பதிவு செய்திருந்தனர்.



ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் 9 மாத கர்ப்பிணியை அழைத்து கொண்டு நடந்தே செல்ல முடிவு செய்த ராம், கடந்த வாரம் லூதியானாவிலிருந்து புறப்பட்டனர். இந்த நிலையில் 100 கி.மீ. தூரம் பயணம் செய்த அவர்கள் அம்பலா நகரை அடைந்தனர். அப்போது பிந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ராம்.உடல்நிலை பலவீனமான நிலையில் அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இறந்தவிட்டது. லாக்டவுனால் வேலையிழந்த ராம் பணமில்லாததால் பிந்தியாவுக்கு சரியான சத்துள்ள உணவை அளிக்க முடியாமல் போனதும் 100 கி.மீ நடந்தே பயணித்ததால் பிந்தியாவின் உடல்நிலை பலவீனமடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அம்பலாவிலேயே அந்த குழந்தைக்கு இறுதி சடங்கை மேற்கொண்டனர். அம்பலா கண்டோன்மென்ட்டில் தம்பதி தங்க தன்னார்வல நிறுவனம் ஏற்பாடு செய்து அவர்களுக்கு உணவு வழங்கியது. ஷிராமிக் ரயில் மூலம் பீகார் அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளது. ராம் தம்பதிக்கு  இதுதான் முதல் குழந்தையாம். அந்த குழந்தையை பற்றி எத்தனை கனவுகளை கண்டிருந்தனரோ தெரியவில்லை. ஆனால் நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மோசமாகி வருவது நன்றாகவே தெரிகிறது.


-ஸ்டார் வெங்கட், சுரேஷ்குமார்,கிரி.


Comments