ஏழைகள் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும்!

         -MMH


       பிரதமர் நரேந்திர மோடி தனது ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


       கொரோனா பரவுதல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம்தேதியில் இருந்து பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக 80 சதவீதத்திற்கும் அதிகமான துறைகள் முடக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள், வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


    சுற்றுலா, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைக்களும், வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ளன. இதனை சரி செய்யும் விதமாக மத்திய அரசு ரூ.20 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.


     நம்முடைய மக்களுக்கு இந்த சூழலில் பணம்தான் முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே சிறப்பு பொருளாதார திட்டத்தை பிரதமர் மோடி மறு பரிசீலனை செய்ய வேண்டும். கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிக்காலத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கு பணத்தை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


     கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி முக்கிய வாக்குறுதியை அளித்தது. அதாவது, ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வரையில் வழங்குவோம் என்று நாங்கள் கூறியிருந்தோம். அதுபோன்றதொரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.


    வெளி மாநில தொழிலாளர்கள் வேலையின்றி சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பணம்தான் தேவையாக உள்ளது. கடன் அவர்களது தேவை அல்ல. விவசாயிகளுக்கும் தற்போதைய சூழலில் பணம்தான் தேவையாக இருக்கிறது. நாம் அவர்களுக்கு பணத்தை வழங்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.


   இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி பொருளாதார வல்லுனர்களான ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, நாட்டில் 60 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர். அவர்களுக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டும். இதே முறையை அமெரிக்கா கடைபிடித்தது என்று அபிஜித் பானர்ஜி கூறியிருந்தார்.


-MM ஹாரூன், AM இஸ்மாயில். 


Comments