காட்டுத் தீயில் 300 கோடி உயிரினங்கள் பாதிப்பு.!

       -MMH


ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் 300 கோடி உயிரினங்கள் பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - ஆஸ்திரேலியாவில் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு தொடக்கம் தீவிர காட்டுத்தீ ஏற்பட்டிருந்தது. இதனால் சுமார் 1,15,000 சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதி பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் 30க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வாடினர். ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுதான் மிக நீண்ட காட்டுத் தீயாக இருந்தது. மேலும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் ஏராளமான விலங்குகள் அதிகம் பாதிக்கப்பட்டன. ஆனால் எத்தனை விலங்குகள் உயிரிழந்தன என்று தெளிவான அறிக்கைகள் இல்லை. இருப்பினும் தீ, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பிரச்னைகளால் அதிகளவில் விலங்குகள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறினர். இந்த பாதிப்புக்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் சுமார் 3 பில்லியன் ( 300 கோடி) விலங்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதில் 143 மில்லியன் பாலூட்டிகள், 2.46 பில்லியன் ஊர்வன, 180 மில்லியன் பறவைகள், 51 மில்லியன் தவளைகளும் அடங்கும். இந்த கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் முடிவடையவில்லை என கூறுகின்றனர்.


இந்த அறிக்கை முடிவுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. அதனால் தற்போது 3 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட விலங்குகள் எண்ணிக்கை மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் எத்தனை விலங்குகள் உயிரிழந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற பாதிப்பு இதுவரை வேறு எங்கும் நடக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


-கிரி,கோவை.


 


Comments