அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!!

     -MMH


     ஆக.3 முதல் வகுப்புகள் தொடக்கம்: சென்னை பல்கலை அறிவிப்பு! கொரோனா பெருந்தொற்றால் மார்ச் மாத இறுதியிலிருந்து தமிழ்நாட்டில் பொது முடக்கம் அமலில் உள்ளது. ஆறாம் கட்ட பொது முடக்கம் இன்று முதல் நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட பொது முடக்கம் நாளை முதல் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்த பொது முடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதுடன், பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, ரத்தும் செய்யப்பட்டுள்ளன.


கல்லூரி மாணவர்களுக்கான தேர்வை நடத்த பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்திய போதும் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகத்தைக் காரணம் காட்டியும் பல கல்லூரிகள் கொரோனா தடுப்பு மையங்களாக செயல்பட்டு வருவதாலும் தமிழ்நாடு அரசு அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பருவத் தேர்வுகள் குறித்து தெளிவான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. 


கல்வி நிறுவனங்கள் திறக்க முடியாத சூழலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. தற்போது சென்னை பல்கலைக்கழகம் ஆன்லைன் வகுப்புகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இளநிலை இரண்டாம் , மூன்றாம் ஆண்டுகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கவும், இளநிலை மாணவர் சேர்க்கையை செடம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. முதலாம் ஆண்டில் சேரவுள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை கல்லூரி நிர்வாகங்கள் செய்து தர வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


நாளையவரலாறு செய்திக்காக,


-செல்வபுரம் ஹனீப்.


 


Comments