சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்த சாமி காலமானார். !!

        -MMH


          சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்த சாமி இதய நோய் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


          சாயாவனம் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர் சா. கந்தசாமி. 1940-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தவர். சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார் சா. கந்தசாமி. சுடுமண் சிலைகள் தொடர்பான அவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது.


        சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 1989-ல் சா. கந்தசாமியின் காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது. சா. கந்தசாமியின் விசாரணை கமிஷன் நாவலுக்கு 1998-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சா. கந்தசாமி இன்று சென்னையில் காலமானார்.



கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்:


மறைந்தாரே சா.கந்தசாமி!


'சாயாவனம்' சாய்ந்துவிட்டதே!


தன்மானம் - தன்முனைப்பு


தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!


சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது இவ்வாறு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.



திமுக தலைவரும்,தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான  மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி:


        சாயாவனம்' என்ற புதினத்தின் வாயிலாகத் தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி - சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன். எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி.


        இன்றைய நிலையில் அவருடைய கருத்தும் படைப்பும் மிகவும் தேவைப்படும் சூழலில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். நாட்டுப்புறவியலையும், நவீன இலக்கியக் கூறுகளையும் சமமான அளவில் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய சா.கந்தசாமி அவர்கள், கருணாநிதியின் பேரன்புக்குரியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நாளைய வரலாறு செய்திக்காக ,


-செல்வபுரம் ஹனீப்.


Comments