அண்ணா சிலைக்கு காவிக் கொடி: எச்சரித்துள்ளார் முதல்வர் !!

    -MMH


அண்ணா சிலைக்கு காவிக் கொடி: மர்ம நபர்கள் அட்டூழியம்.


கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை உள்ள பீடத்தில் மர்ம நபர்கள் காவிக் கொடி கட்டியுள்ளனர். கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டியும், காவிக் கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சமீப நாள்களாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு இந்துத்துவ அமைப்புகள் காவி சாயம் பூசுவதும், காவித் துண்டு போர்த்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் இந்த செயலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின் திராவிட இயக்கத் தலைவர்கள் சிலைகளை அவமதிக்கும் செயலில் இந்து அமைப்புகள் அதிகமாக ஈடுபடத் தொடங்கின.


கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலையில் காவிச் சாயம் ஊற்றிய பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி அருண் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.


இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் குழுத்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையும் அவமதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று குப்பைகளை அகற்றியதோடு, காவிக் கொடியையும் அவிழ்த்தனர். இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட நபர் யார் என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்  குண்டர் சட்டம்  மூலம் கைது செய்யப் படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.


நாளையவரலாறு செய்திகளுக்காக,


-செல்வபுரம் ஹனீப்.


Comments