நாளை முதல் தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!!!

     -MMH


நாளை முதல் தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. முழு விவரம்:


   தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்டம்பர் 1ம் தேதி) முதல் சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படுகிறது. ரூ.5 முதல் ரூ10 வரை கட்டணம் உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது.


இந்த சுங்கச்சவாடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவது வாடிக்கை. அதன்படி ஒரு பாதி சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதலும் மறுபாதி சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்படும். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் கட்டண உயர்வு ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து தான் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்டம்பர் 1ம் தேதி முதல்) சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இங்கு கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.


நாளை கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் 21 சுங்கச்சவாடிகளின் விவரம் பின்வருமாறு: அதன்படி புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை),ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுப்பட்டி (சேலம்), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம்(குமாரபாளையம்), திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி ( உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி) ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


சுங்க கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்படும். எனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என மக்கள் கவலையில் உள்ளார்கள். ஒருபக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறுபக்கம் சுங்ககட்டணம் உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், ஏற்கனவே மக்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் வழக்கம் போல் சுங்க கட்டணத்தை உயர்த்துவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


- B.செந்தில் முருகன், சென்னை தெற்கு.


 


Comments