உழவர் சந்தையை திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்!! தாராபுரத்தில் பரபரப்பு !!

     -MMH


     திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று காலை உழவர் சந்தையை திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


     தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள அண்ணா நகரில் உழவர் சந்தை உள்ளது. கொரோனா நோய் தொற்று அபாயத்தால் உழவர் சந்தை அருகில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டது.


     முன் பகுதியில் வியாபாரிகள் மார்க்கெட் அமைக்கவும், உள் பகுதி விவசாயிகளுக்கும் ஒதுக்கப்பட்டது. வியாபாரிகளுக்கு மின்சாரம், மேற்கூரை உள்ளிட்ட வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு இந்த வசதிகள் கிடையாது.


     எலக்ட்ரானிக் தராசு பயன்படுத்தவேண்டும் என்பதால் மின்சார வசதியின்றி வியாபாரம் தடைப்படுகிறது. இது தவிர வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பு வாகனங்களை நிறுத்தி சரக்கு ஏற்றி இறக்குகிறார்கள்.


     இதனால் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தங்களின் விளைப்பொருட்கள் விற்பனையாகாமல் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மாவட்ட கலெக்டர், சப்- கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு மீண்டும் உழவர் சந்தையில் வியாபாரம் நடத்த கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனையடுத்து இன்று காலை உழவர் சந்தை முன்பு திரண்ட விவசாயிகள் சந்தையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது,


     "இடமாற்றத்தால் விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகிறோம். மாதக்கணக்கில் விளைவித்த காய்கறிகளை இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் விற்க முடியவில்லை. இதனால் நாங்கள் பெரும் பொருளாராத இழப்பை சந்தித்து வருகிறோம். இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திங்கட்கிழமை உழவர் சந்தையை திறக்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறி உழவர் சந்தையில் வியாபாரம் செய்வோம் என்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்


Comments