அனைவருக்கும் இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்து!!

    -MMH


     அனைவருக்கும் இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்து!


     கேரளாவில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் ஓணம், தென் தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஆகும்.


     அரக்கனாக இருந்தாலும், மக்கள் விரும்பும் அரசனாக, பல தான தர்மங்கள் செய்து தேவர்கள் அளவு உயர நினைத்த மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்த கிருஷ்ணபரமாத்மா மகாபலியிடம் 3 அடி மண்ணை தானம் கேட்டு ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்து, 3வது அடி எங்கு வைப்பது எனக் கேட்க, மகாபலி 3வது அடியை தன் தலை மீது வைக்குமாறு சொன்னான்.


     மிகச்சிறந்த அரசனான மகாபலியிடம், மூன்றாம் அடியை தலைமீது வைத்து அவனை பாதாளத்தில் அழுத்தும்முன் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, நான் ஆண்டு தோறும் என் மக்களை வந்து பார்த்து அவர்கள் எப்படி செழிப்பாக இருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என பார்க்க இந்த பூலோகம் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டார். திருமால் அளித்த அந்த வரத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணம் நட்சத்திரத்தில் மகாபலி தன் மக்களை வந்து பார்க்க வருவதாகப் புராண கதை கூறுகின்றது.


     ஓணம் பண்டிகை கேரளாவில் மலையாள மக்களால் மிகப்பெரிய திருவிழாக்களில் மிக முக்கியமானது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை , மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப் படுகின்றது.


ஓணம் கொண்டாடும் முறை :


10 நாள் திருவிழா :


     இந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம்.


     அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்வர் 4வது நட்சத்திரமான விசாகத்தில் ஒன்பது சுவை உணவுகளை தயார் செய்து உற்றார், உறவினர் என அனைவரும் கூடி உண்டு மகிழ்கின்றனர். குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகைகள் இந்த பட்டியலில் இடம்பெறுவது வழக்கம். இந்த உணவை சத்யா என அழைக்கின்றனர்.


     அனுஷன் எனும் 5ம் நாள் அனிழம் என அழைக்கின்றனர். இந்த நாளில் பாரம்பரிய படகுப் போட்டி நடத்தப்படுகின்றது. இந்த படகுப் போட்டியில் பங்குபெறுவோர் வஞ்சிப்பாட்டு எனும் பாடலைப் பாடிக்கொண்டே உற்சாகத்துடன் படகை விரைவாக செலுத்துவது வழக்கம்


    ஆறாவது நாளில் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், 8வது நாள் பூராடம், அடுத்து உத்திராடம் என அழைக்கப்படுவதோடு, 10ம் நாள் திருவோணம் என மிகச் சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது


அத்தப்பூ கோலம் :


    அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் பண்டிகை வண்ண அத்தப் பூக்களால் கோலம் போட்டு தொடங்கப்படுவது வழக்கம். இந்த 10 நாட்களிலும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மக்கள் அத்தப்பூ கோலமிட்டு வீட்டைப் பொலிவாக வைப்பது வழக்கம்.


     உலகெங்கிலும் உள்ள சேரநாட்டு உறவுகளுக்கு நாளைய வரலாறு வழங்கும், ஹிரதயம் நிறைஞ்ச ஓணாஷம்ஷகள்!


-Ln. இந்திராதேவி முருகேசன்,சோலை.


Comments