ஒரே நாடு!! ஒரே ரேஷன் கார்டு!! - திட்டம் நாளை முதல்!!

       -MMH 


          சென்னை : நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள, ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், தமிழகத்தில், நாளை முதல் அமலாகிறது.


             மத்திய அரசு, இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தின் கீழ், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள், தமிழக ரேஷன் கடைகளிலும்; தமிழக கார்டுதாரர்கள், மற்ற மாநிலங்களில் உள்ள கடைகளிலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம்.


             இதற்காக, ரேஷனில், 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை கருவி வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ஒரே ரேஷன் திட்டத்துடன், கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து மட்டுமே பொருட்கள் வழங்க, உணவுத்துறை முடிவு செய்தது. இதற்காக, ரேஷன் கடைகளில், கைரேகை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய, நவீன, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வைக்கப்பட்டுள்ளது.


              இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நேற்று முன்தினம் வரை, 28 மாவட்டங்களில், கைரேகை கருவிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைக்குள், கூடுதலாக நான்கு மாவட்ட கடைகளிலும் வைக்கப்படும். அதாவது, துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களில், அக்.,15க்குள் வைக்கப்படும்.ஏற்கனவே அறிவித்தபடி, தமிழகத்தில், ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம், நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.


              இதன் வாயிலாக, அன்று முதல், மற்ற மாநில கார்டுதாரர்கள், தமிழக ரேஷன் கடைகளில், கைரேகையை பதிவு செய்து, அரிசி, கோதுமை வாங்கலாம். அதற்காக அவர்களிடம், மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை வசூலிக்கப்படும். கைரேகை பதிவாகவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது. இதேபோல், மற்ற மாநிலங்களில் உள்ள தமிழக கார்டுதாரர்களும், அம்மாநிலங்களில் பொருட்கள் வாங்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


              ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குள் வசிக்கும் கார்டுதாரர்கள், தங்கள் வார்டு அல்லது கிராமத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் உட்பட, வேறு எந்த பகுதியில் உள்ள கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம். இந்த சேவையை, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் சேர்த்து, நாளை முதல் செயல்படுத்தலாமா அல்லது மீதமுள்ள ஆறு மாவட்டங்களிலும், கைரேகை கருவிகள் வைத்த பின், 15ம் தேதி முதல் செயல்படுத்தலாமா எனவும், அரசு பரிசீலித்து வருகிறது.


-ஸ்டார் வெங்கட்.


Comments