பழனி பக்தர்களே கவனம்! - மொட்டையில் மோசடி..!

        -MMH 


    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவஸ்தானம் முடி கொட்டகை எனக் கூறி பெண் பக்தர்களை அழைத்து சென்று தனியார் சலூனில் மொட்டை அடித்து இரட்டை லாபம் பார்க்கும் மோசடி கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.


     கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கடந்த மார்ச் முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தருகின்றனர்.


     பழனி வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த ஏதுவாக கோவில் நிர்வாகம் சார்பில் சரவணப்பொய்கை மற்றும் கிரிவலவீதியில் ஒருங்கிணைந்த முடி கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.


  இங்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு மொட்டை அடிக்கப் படுகிறது. பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதால் மற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முடிகாணிக்கை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.


 இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணப்பொய்கை அருகே செயல்பட்டு வரும் தனியார் குளிக்கும் இடத்தை தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்று கூறி வரிசையில் நிற்கும் பக்தர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று மொட்டையடித்துக் பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோட்டில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  அங்கு மொட்டையடித்த பிறகு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணம் என்று கூறி வசூல் செய்ததாகவும், குழந்தைகளுக்கு சுடு தண்ணீர் கேட்டால் அதற்கும் 50 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் ஏமாற்றப்பட்ட பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழனி சரவணப்பொய்கை முடி கொட்டகை 20 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மொட்டையடிக்கும் நிலை உள்ளது.


 இதனை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பெண்களின் முடி அதிகமான விலைக்கு போவதால் பெண் பக்தர்களை குறிவைத்து ஏமாற்றுவதும் அதிகரித்துள்ளது. எனவே முடி கொட்டகையில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து விரைவாக மொட்டை அடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் பக்தர்களை ஏமாற்றும் கட்டணக் கழிப்பறை உரிமையாளர்கள் மற்றும் போலி கைடுகள் மீது கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-ஸ்டார் வெங்கட்.


Comments