இடைத்தரகரை நம்பி, பணத்தை இழக்கும் நுகர்வோர்கள்!!

     -MMH


     ஏமாறாதீங்க...! இடைத்தரகரை நம்பி, பணத்தை இழக்கும் நுகர்வோர்!!


      திருப்பூர்:அனைத்து பணிகளும் ஆன்-லைன் மயமாகிவிட்ட போதிலும், மின்வாரிய பிரிவு அலுவலகம் சார்ந்துள்ள இடைத்தரகர்களால், நுகர்வோர் மற்றும் அதிகாரிகள் இடையே பிரச்னை அதிகரிக்க துவங்கியிருக்கிறது.


     திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், புதிய இணைப்பு, பெயர் மாற்றம் என, பல்வேறு பிரிவு அலுவலகங்கள் உள்ளன. பொதுமக்களின், மின்சார்ந்த தேவை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டுகளில் மனித ஆற்றல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த பணி, தற்போது ஆன்-லைன் மயமாகியுள்ளன.


     இதனால், புதிய மின் இணைப்பு பெறுவது, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளை, மின் நுகர்வோரே ஆன்-லைன் மூலம் செய்து கொள்ள முடியும்.இருப்பினும், இணைய வழி செயல்பாடு குறித்து விவரம் அறியாத பலர், இடைத்தரகர் உதவியை நாடுகின்றனர். இணைய வழியில், விண்ணப்பம் பூர்த்தி செய்வது, மின்வாரிய அலுவலகங்களுக்கு சமர்பிப்பது போன்ற பணியை, அவர்கள் செய்து கொடுக்கின்றனர். இதற்காக, மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்துடன், கூடுதல் கட்டணத்தை, மின் நுகர்வோரிடம் வசூலித்து கொள்கின்றனர்.இணைய தளம் மற்றும் கம்ப்யூட்டர் தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர் பலர் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர்.


     பல அலுவலகங்களில், இடைத்தரகரின் தலையீடை, மின்வாரிய அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்; சில அலுவலர்கள், அவர்களுடன் 'கை கோர்த்து' இருப்பதாகவும், சர்ச்சை கிளம்பியுள்ளது.இதுகுறித்து, திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் கூறியதாவது;"மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற மின்சார்ந்த பணியை எளிமையாக்கும் நோக்கில்தான், மின் தேவை சார்ந்த பணி அனைத்தும், ஆன்-லைன் மயமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பலர், இடைத்தரகரை நம்பி, பணத்தை இழக்கின்றனர். அவர்களின் குறுக்கீடால், மின்வாரிய அலுவலர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே கருத்துவேறுபாடு கூட ஏற்படுகிறது. இடைத்தரகர் போன்று செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். பொதுமக்கள், தங்களின் மின்சார்ந்த தேவைக்கு, நேரடியாக மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்."இவ்வாறு, அவர் கூறினார்.


நாளைவரலாறு செய்திக்காக,


முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments