கோவில் வழித்தடத்தில் நிம்மதியில்லை! பக்தர்கள் கடும் மன உளைச்சல்..!

     -MMH


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்திலும், வழித்தடத்திலும் நிலவும் பிரச்னைகளால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்தில், காலணிகள் விடும் பகுதி, நுழைவு வாயில், கோவிலின் பின்பக்கம் புதர் முளைத்துள்ளன. புதரில், பாம்பு அதிகளவில் உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.புதர்களை அகற்றி கோவிலை சுத்தம் செய்யாமல், கோவில் நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.


அதேபோல், கோவிலுக்கு செல்லும், இரண்டு வழித்தடத்திலும், கான்கிரிட் ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக படு மோசமான நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால், பல இடங்களில் குப்பை குவிந்துள்ளது.அதுமட்டுமின்றி, வருவாய்த்துறையினர் நடவடிக்கைஎடுக்காததால், கோவில் செல்லும் வழித்தடத்தில், வணிகக்கடைகளின் ஆக்கிரமிப்புகளால், ரோடு குறுகலாக உள்ளது. இதனால், பக்தர்கள் பயணத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.


இந்த வழித்தடத்தில், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கையை பிடித்து இழுத்து, 'எங்கள் கடையில வண்டி நிறுத்துங்க, மாலை, பூஜை பொருள் வாங்கிட்டு போங்க,' என, கடைக்காரர்கள் கூறி தொல்லை கொடுக்கின்றனர்.கோவில் நிர்வாகம், ஆனைமலை பேரூராட்சியினர், வருவாய்த்துறையினர், பக்தர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அரசு துறை அதிகாரிகள், இப்பிரச்னைகளை சரிசெய்து, பக்தர்கள் நிம்மதியாக கோவிலுக்கு வந்து செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.


- கிரி கோவை மாவட்டம்.


Comments