நொய்யல் ஆற்றில் குளித்த இருவர் பலி சடலமாக மீட்பு..!!!

   -MMH


நொய்யல் ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று மணிநேர தேடுதலுக்கு பிறகு இருவரது உடல்களும் சடலமாக மீட்கப்பட்டது


கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன். அதே பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவரது பிரபாகரன்.தமிழ்செல்வன் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ பணியாளராக பணியாற்றி வந்தார். பிரபாகரன் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்தார்.


நண்பர்களான இருவரும் தமிழ்செல்வனின் பிறந்தநாளான நேற்று (30.10.2020) கோவிலுக்குச் சென்றுவிட்டு மாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சித்திரைச்சாவடி அணை பகுதிக்கு சென்றுள்ளனர்.கைகாட்டி பிரிவு பாலத்தின் கீழ் ஆற்றில் இறங்கிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வன் 20 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதனால் பதற்றமடைந்த பிரபாகரன், தமிழ் செல்வனை மீட்கும் முயற்சியில் நீரில் மூழ்கி தானும் சேற்றில் சிக்கிக் கொண்டார்.


 நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி இருவரது உடல்களையும் சடலமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- கிரி கோவை மாவட்டம்.


Comments