போடி அருகே பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு !!

     -MMH


    வருஷநாடு அருகே 16 ம் நூற்றாண்டு குதிரை வீரன் நடுக்கல் கண்டுபிடிப்பு !!!


 போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்கள் வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தில் கி.பி.16ம் நுாற்றாண்டை சார்ந்த குதிரைவீரன் நடுகல், சதிகல் இரண்டு கண்டுபிடித்துள்ளனர்.


     இக்கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில் பேராசிரியர்கள் மாணிக்கராஜ், மோகன்ராஜ், ஆய்வு மாணவர் ராம்குமார் ஆகியோர் கல்வெட்டுகள், கற்கள் மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர் மாணிக்கராஜ் கூறுகையில்: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வம், தொல்லியியல் ஆர்வலர் ஞானசேகரன் தகவலின்படி அப்பகுதியில் வரலாற்று தேடல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் தங்கம்மாள்புரத்தில் கி.பி.16ம் நுாற்றாண்டை சார்ந்த குதிரைவீரன் நடுகல், சதிகல் கண்டறியப்பட்டுள்ளது. குதிரைவீரனின் வீர மரணத்திற்கு பின் அவரது நினைவாக அமைக்கப்பட்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வீரன் ஒருவர் குதிரையின் மீது அமர்ந்து போருக்கு செல்வது போன்ற தோற்றத்தில், வலது கையில் வாலை ஓங்கியும், இடது கையில் குதிரையின் கடிவாளத்தை இழுத்து பிடித்தபடி சிற்பமாக நடுகல் அமைந்துள்ளது.


     மன்னனாக இருக்கலாம்: இதில் தளபதி அல்லது குறுநில மன்னனின் குதிரை போல அணிகலன்கள் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் மன்னனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. குதிரைக்கு முன்பு வீரனின் இரு மனைவியர்களும், வீரனுக்கு கீழ் பணியாற்றிய இரு வீரர்களும் வைசாகஸ் தானகம் என்ற கோலத்திலும், இரு பெண்கள் மங்களப் பொருட்கள், இடது கையில் வட்டவடிவமான கண்ணாடியை பிடித்தபடி உள்ளனர். இரு பெண்கள் தமிழம் என்னும் கொண்டை போட்டும், உயர்ந்த நிலையில் வாழும் பெண்கள் அணியும் பட்டாடை முன்கொசுவம் வைத்து இந்த நடுகல் அமைந்துள்ளது.


     குதிரை வீரனின் வீர மரணத்திற்குப் பின்பு இரு மனைவிகளும் சதி எனும் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்துள்ள நிலையிலும், குதிரை வீரனின் கீழ் பணியாற்றிய இரண்டு வீரர்கள் போரில் வீர மரணம் அடைந்ததன் நினைவாக அவர்களுக்கு நடுகல் அமைந்துள்ளது. வீரர்கள் தங்களது வலது கையில் வாள் பிடித்த படியும், இடது கைகளை தொங்கவிட்ட படியும், வீரர்களுக்குரிய ஆடை ஆபரணங்களுடன் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். குதிரைக்கு பின் பக்கம் சேவகன் ஒருவன் குதிரை வீரனின் வீர மரணத்தை கவுரவிக்கும் விதமாக குடை பிடித்தும், அதன்பின்பு இரு சேவகர்கள் குதிரை வீரனுக்கு சாமரம் வீசுவதும், அதன் பின் இரு வீரர்கள் துப்பாக்கியை தங்களுடைய தோள்பட்டையில் தாங்கியபடி, தங்களுக்கு முன் உள்ளவர்களை பின் தொடர்வது போல் காட்சி அமைந்துள்ளது.


     இதுபோல வீரர்கள் இறந்த பின் அவர்களது மனைவிகள் உடன்கட்டை அல்லது தீக்குளித்து இறப்பவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இதே நுாற்றாண்டை சார்ந்த சதிக்கல்லும் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நாளையவரலாறு செய்திக்காக, 


-ஆசிக்,தேனி.


Comments