குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்புபணியை கைவிட்டதால் பரபரப்பு!!

      -MMH 


           பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில், உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய வந்த குடிநீர் பணியாளர்கள், பணிகளை பாதியில் கைவிட்டு சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறிக் கொண்டு இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது. இது குறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.


             இந்நிலையில், நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் பணியாளர்கள் மண் தோண்டும் இயந்திரம் கொண்டு, அப்பகுதியில் மண்ணை தோண்டினர். பின், சிறிது நேர ஆய்வுக்கு பின், தோண்டிய குழியை மூடிவிட்டு, அப்பகுதியில் இருந்து அவசர, அவசரமாக வெளியேறினர். இதனால், நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.இது குறித்து, கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறியதாவது.


             காரமடையில் இருந்து கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டக்குழாய் மற்றும் தொண்டாமுத்துார் குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள், மேட்டுப்பாளையம் ரோட்டில் தனித்தனியாக பதிக்கப்பட்டுள்ளன. பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் குழாய் உடைப்பு ஏற்பட்டது குறித்து, தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தோம்.


          அது, தொண்டாமுத்துார் குடிநீர் திட்டக்குழாய் என, தெரியவந்தது. அதை தொண்டாமுத்துார் குடிநீர் குழாய் திட்ட அதிகாரிகள்தான் சரி செய்ய வேண்டும் என்பதால், இது குறித்த தகவலை, அவர்களுக்கு தெரிவித்து விட்டோம். இவ்வாறு, கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 


-கிரி,கோவை மாவட்டம்.


Comments