நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவை வருமா! ஆய்வு செய்ய உச்சநீதி மன்றம் அதிரடி ஆணை!

     -MMH


     புது தில்லி:  ஒரு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தின் மீது நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழக மருத்துவ மாணவா் சோலாங்கி உள்பட 9 மாணவா்கள் தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், இந்த ஒப்புதலை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.


     இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 2005-06 ஆம் ஆண்டில் சேர்ந்த இந்த மாணவா்கள், பல்கலைக்கழகங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி தங்களை ஏமாற்றி விட்டதாகப் புகாா் தெரிவித்து தேசிய நுகா்வோா் குறைதீா்ப்பு ஆணையத்தில் புகாா் மனுவை அண்மையில் தாக்கல் செய்தனா்.


     அந்த மனுவில் அவா்கள் கூறியிருந்ததாவது:
முதலில் தாய்லாந்தில் இரண்டு ஆண்டுகள் படிப்பு, அதன் பின்னா் சேலத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டரை ஆண்டுகள் படிப்பு முடிந்ததும் இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரத்துடன் கூடிய எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பேரில் இந்தப் பல்கலைக்கழகத்தில்         சேர்ந்தோம்.


     ஆனால், தாய்லாந்தில் முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பை நாங்கள் முடித்தபோது, தொடா்ந்து எஞ்சிய 2 ஆண்டு படிப்புகளையும் அங்கேயே தொடர வேண்டும் எனவும் படிப்பை முடித்த பின்னா் வெளிநாட்டு மருத்துவப் பட்டத்துக்கான சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இந்தியாவில் அங்கீகாரம் பெற வேண்டுமெனில், அதற்கென தனித்தேர்வை நாங்கள் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


     ஆனால், எங்களுக்கு அளிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். பட்டம் ஒரு முதன்மையான மருத்துவப் பட்டம் இல்லை என்பதால் அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் மட்டுமின்றி தாய்லாந்து மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரமும் இல்லை என்பதை தேசியத்  தேர்வுகள் வாரியம் தெரிவித்து விட்டது.


     இதனால், மருத்துவராகும் வாய்ப்பை நாங்கள் இழந்திருப்பதோடு, கால விரயம், மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் 9 பேருக்கும் பல்கலைக்கழகம் தலா ரூ. 1.4 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனா்.


     இந்த மனுவை விசாரித்த தேசிய நுகா்வோா் குறைதீா்ப்பு ஆணையம், "கல்வி நிறுவனங்கள் கல்வியுடன் சேர்த்து இன்பச் சுற்றுலா, மாணவா்களை ஊக்குவிக்கும் கல்வி சாராத நடவடிக்கைகள், நீச்சல், விளையாட்டு என்பன உள்ளிட்ட திட்டங்களை மாணவா்களுக்கு அளிக்கின்றன. எனவே, கல்வி நிறுவனங்கள் நுகா்வோா் பாதுகாப்புச்  சட்டம் 1986-இன் கீழ் வராது என்று கூறி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.


     இதை எதிா்த்து மாணவா்கள் 9 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 'ஒரு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உள்பட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால், இதுதொடா்பாக உரிய முடிவை எடுக்க மேல்முறையீட்டு மனுவை அனுமதிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப் படுகிறது'"என்று கூறினா்.


     மேலும், 'இந்த மேல்முறையீட்டு மனு தொடா்பாக ஆறு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் செளமியாஜித்தை நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டது.


-சோலை, சேலம்.


Comments