திருமணம் ஆனதை மறைத்து! - மணம் புரிவதை தடுக்க,நடவடிக்கை எடுக்க வேண்டும்!!-உயர் நீதிமன்றம்!!

     -MMH


   திருமணம் ஆனதை மறைத்து, பெண்களை ஏமாற்றி மணம் புரிவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த, இளம் பெண் ஒருவர், வீட்டை விட்டு திருமணமான ஆணுடன் சென்று விட்டார்.


   அவரை திருமணமும் செய்தார். இதையடுத்து, மகளை மீட்டு தரக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.


   அப்போது, 'இதுபோன்ற வழக்குகள் நிறைய வருகின்றன; நடந்த திருமணத்தை மறைத்து, பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


   அதை பரிசீலித்த நீதிபதிகள், '10 ஆண்டுகளில், 53 ஆயிரத்துக்கும் மேல், இத்தகைய வழக்குகள் பதிவாகி உள்ளன. மனைவி, குழந்தைகளை ஏமாற்றுவது மட்டுமின்றி, அப்பாவி இளம் பெண்ணையும், திருமணமான ஆண்கள் ஏமாற்றுகின்றனர். அரசு தரப்பில் அளித்த விபரங்களை பார்க்கும் போது, அதிர்ச்சியாக உள்ளது' என்றனர்.


   இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு அளித்த விபரங்களில் இருந்து, சமூகத்தில் தார்மீக மதிப்பு எவ்வளவு மோசமாகி உள்ளது என்பது தெரிகிறது. இந்தப் பிரச்னைக்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


   இவ்வழக்கில், மத்திய சமூக நலத்துறையை சேர்க்கிறோம். உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், 'நோட்டீஸ்' பெற வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என, பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


   இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்படி, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர். குழந்தைகளுக்கு அன்பு, பரிவு கிடைக்காதது, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகி விடுகிறது என்றும் கூறினர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


- R.ராஜேஷ், சென்னை மேற்கு.


Comments