ஆதரவற்ற மாணவர்களை கைதுாக்கி விடும் PSG!!

     -MMH


     கல்வி என்பது வியாபாரமாகியுள்ள சூழலில், கோவை பி.எஸ்.ஜி., நிறுவனத்தின் கீழ், தாய் அல்லது தந்தை, பெற்றோர் இருவரையுமோ இழந்த குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் இலவச கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டுக்கு, முதல்கட்ட சேர்க்கை முடிவுற்ற நிலையில், இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


     ரொம்ப நல்ல விஷயமாச்சே...என்ற எண்ணத்துடன், இது குறித்து கூடுதல் தகவல் அறிய, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை மாணவர் இல்ல செயலர் நந்தகோபாலனை அணுகினோம்...


* இச்சேவை எப்போதிருந்து நடந்து வருகிறது?


பி.எஸ்.ஜி.,பள்ளி துவங்கப்பட்டபோதே, 1926ல் இலவச கல்வி வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டு மீண்டும், 1995ல் அறங்காவலர் கார்த்திகேயன் மூலம் துவக்கப்பட்டு, தற்போது முதல் தடையின்றி தொடர்கிறது. 


*எதன் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்கின்றீர்கள்?


தாய் அல்லது தந்தை, பெற்றோர் இருவரும் இல்லாத மாணவர்கள் தேர்வு செய்து, 6 முதல் 12ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி, தங்குமிடம், மருத்துவ உதவி, உணவு போன்ற அனைத்து செலவுகளையும் ஏற்கிறோம்.மாணவர்களின் வீட்டுக்கே சென்று, அவர்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்கிறோம். இப்படி, தகுதியான மாணவர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது.


*தற்போது இல்லத்தில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்; என்னென்ன வசதிகள் உள்ளன?


6 முதல் பிளஸ்2 வரை, 103 மாணவர்கள் இல்லத்தின் பொறுப்பில் உள்ளனர். நடப்பாண்டில், 130 பேர் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். உடற்பயிற்சி கூடம், விளையாட்டு, நுாலகம், டேபிள் டென்னிஸ், கராத்தே, நடனம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மனநல ஆலோசனையும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.தற்போது, 2 கோடி ருபாய் மதிப்பில், புதிய கட்டடம் இம்மாணவர்களுக்காக தயார்நிலையில் உள்ளது. வாரம் ஒரு முறை அசைவம், ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா என, சொந்த பிள்ளைகளை போல் கவனித்துக்கொள்கிறோம்.


*இதுவரை பயன்பெற்ற மாணவர்கள் குறித்து...?


மாணவர்கள் இல்லம் மூலம், 400 மாணவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். திறமையான மாணவர்கள் கண்டறியப்பட்டு, கலை, அறிவியல், மருத்துவம் உட்பட உயர்கல்வி தொடரவும் வாய்ப்புகள் உருவாக்கி தருகிறோம். இதன் மூலம் ஒரு மாணவர், டாக்டர் பட்டம் பெற்று சிறப்பான நிலையில் உள்ளார்.


*மாணவர்கள் உயர உதவுகிறீர்கள்...மாணவியருக்கு இல்லையா?


தற்போதைக்கு மாணவர்களுக்கு மட்டுமே இங்கு சேர்க்கை நடைபெறுகிறது. இதுபோன்று உதவி கோரி வரும் மாணவிகளுக்கு, கோவை கன்யாகுருகுலம் பள்ளி வாயிலாக வாய்ப்பு பெற்றுத் தர உதவி செய்து வருகிறோம். இந்த இல்லத்தில், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு, நுாலகம், டேபிள் டென்னிஸ், கராத்தே, நடனம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மனநல ஆலோசனையும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. வாரம் ஒரு முறை அசைவம், ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா என, சொந்த பிள்ளைகளை போல் கவனித்துக்கொள்கிறோம்.


*பி.எஸ்.ஜி., இல்லத்தில் சேரஎன்ன செய்ய வேண்டும்?


இந்தாண்டு, முதல்கட்டமாக, 60 மாணவர்கள் விண்ணப்பித்ததில் தகுதியான, 38 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் காலியாக உள்ள இடங்களுக்கு, வரும், 21ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பங்களை, வரும் 20ம் தேதி வரை, 'விடுதி காப்பாளர் அலுவலகம், பி.எஸ்.ஜி., அறநிலைய மாணவர் இல்லம், பீளமேடு, கோவை- 4' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 0422-2572310/99448 65628 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments