திரைத்துறைக்கு பிறக்கப்போகுது விடியல்.. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு!!

     -MMH


திரைத்துறைக்கு பிறக்கப்போகுது விடியல்.. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு.. வெளியான நல்ல செய்தி.


   கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் 22ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் திரைத்துறைக்கு புதிய விடியல் பிறக்க போகிறது.


   கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரயில், விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.



    சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு தளங்கள், கடைகள், வணிக வளாகங்களும் மூடப்பட்டன. விடுதிகள், திரையரங்குகளும் மார்ச் 3வது வாரத்தில் இருந்தே மூடப்பட்டன.


    ஆனால் அரசு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இதன்படி கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் படிப்படியாக திறக்கப்பட்டன. சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.


    இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அருகில் உள்ள புதுச்சேரியில் திறக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், தியேட்டர் அதிபர்கள், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    இதேபோல் திரைத்துறையினரும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பல கோடி வருவாய் அவர்களுக்கு வராமல் முடங்கியுள்ளது. பல படங்கள் ஒடிடியில் ரிலீஸ் செய்ய யோசித்து வருகின்றன. திரையரங்குகளின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாகும் வகையில் முக்கிய படங்களும் ஒடிடி நோக்கி செல்ல தொடங்கிவிட்டன. இதனால் திரையரங்குகளின் எதிர்காலமும், திரைத்துறையின் எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.



    இந்நிலையில் திரையரங்கு அதிபர்கள், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேச உள்ளனர். அப்போது திரையரங்குகளை திறப்பது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்ட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு அதிபர்கள் சங்கத்தினர் கூறினர்.


     இந்நிலையில் வரும் 22ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விடும் என தகவல் பரவியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளதாம்.


    ஜீவா, அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம், சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி, நடிக்கும் இரண்டாம் குத்து படங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. திரையரங்கு திறப்பு குறித்து ஓரிரு நாளில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


-செந்தில் முருகன்,சென்னை தெற்கு .


Comments