திருடியவுடன் ரயில் பயணம்!! - விரைவாக பிடித்த கோவை போலீஸ்!!

     -MMH


     முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் பணத்தைத் திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்த இருப்புப் பாதை போலீசார்கோவை அடுத்த பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி கோபால கிருஷ்ணசாமி. வயது 60. இவர் வெளியூர் பயணம் செல்ல திட்டமிட்டு, டிக்கட் முன்பதிவு செய்வதற்காகக் கோவை ரயில் நிலையம் சென்றுள்ளார்.


      அங்குச் சென்ற கிருஷ்ணசாமி ரயில் நிலைய புக்கிங் கவுண்டரில் டிக்கெட் புக் செய்ய வரிசையில் காத்திருந்துள்ளார்.வரிசையில் நின்று கொண்டிருந்த காரணமாக, கிருஷ்ணசாமி தான் கையில் வைத்திருந்த கைப்பையைக் கீழே வைத்துள்ளார். அப்போது கிருஷ்ணசாமிக்கு பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அசந்த நேரத்தில் கீழே வைக்கப்பட்ட கைப்பையைத் தூக்கி சென்றுள்ளார்.


       பை காணவில்லை என்பதை உணர்ந்த கோபால கிருஷ்ணசாமி அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் சம்பவம் தொடர்பாக இருப்புப் பாதை போலீசாரிடம் புகார் அளித்தார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பையை எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. 


      அந்த நபர் கிருஷ்ணசாமியின் கைப்பை எடுத்துக் கொண்டு சென்னை செல்லும் சேரன் விரைவு ரயிலில் ஏறுவது வரை சிசிடிவியில் பதிவாகியிருந்ததுஇதையடுத்து ரயிலில் ஏறி அமர்ந்திருந்த அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பணத்தை அவர்தான் திருடி சென்றார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த திருட்டு செயலில் ஈடுபட்ட நபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், வயது 31 என்பது தெரியவந்தது.


       சம்பவம் தொடர்பாக லட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள கோவை போலீசார், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். போலீசார், லட்சுமணனிடமிருந்து ரூ. 14 ஆயிரத்தையும் மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அதன் உரிமையாளர் கோபால கிருஷ்ணசாமியிடம் வழங்கப்பட்டது. துரிதமாகச் செயல்பட்டு பணத்தை மீட்டு, பாதிக்கப்பட்டவரிடம் அதைத் திருப்பி அளித்த போலீசாரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments