கோவை பீளமேடு அருகே பயங்கரம்! - நான்கு நபருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி..!

      -MMH


கோவை பீளமேடு சம்பவத்தில் இறந்தவர் செளந்தர்.


பணத்தகராறு காரணமாக, நண்பர்களின் உதவியுடன் நான்கு பேரை கத்தியால் தாக்கிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தில், ஒருவர் இறந்த நிலையில், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன், ஒர்க்‌ஷாப் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில், இவரிடம் மைக்கேல் என்பவர் தனது ஆட்டோவின் ஆவணங்களை கொடுத்து 30,000 ரூபாய் பெற்று இருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்தி உள்ளார். பின், இளங்கோவனின் தாய் மைக்கேலை தொடர்பு கொண்டு 10,000 ரூபாய் பணத்திற்கு பதிலாக 9,000 ரூபாய் தான் உள்ளது, எனவும் ஆயிரம் ரூபாய் குறைவாக கொடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.இதனால், கோபமடைந்த மைக்கேல் இளங்கோவனின் தாயாருடன் சண்டை போட்டுள்ளார். இதனை அறிந்த இளங்கோவன், எனது தாயாரிடம் நீ எவ்வாறு இப்படி பேசலாம் என்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து, இன்று மைக்கேல் தனது நண்பர்களுடன் தொட்டிபாளையம் சென்று உள்ளார். அங்கு, இளங்கோவனுடன் பண பிரச்சனை தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளங்கோவனை குத்தி உள்ளார்.


இதனை கண்ட,இளங்கோவனின் உறவினர் சவுந்தர் மற்றும் அவரது நண்பர்கள் தடுக்க முற்பட்டபோது, அவர்களையும் மைக்கேல் கத்தியால் குத்தி விட்டு தனது நண்பர்களுடன் தப்பி உள்ளார். இதனையடுத்து, காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 


இதில் இளங்கோவனின் உறவினரான சௌந்தர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இளங்கோவன், கிருபாகரன், அருண் ஆகிய மூவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.


இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பீளமேடு போலீசார் மைக்கேல் மற்றும் அவருடன் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.


-சீனி,போத்தனூர்.


Comments