கோத்தகிரி அருகே துப்பாக்கியை காட்டி இளம்பெண் கடத்தல்..!

     -MMH


 கோத்தகிரி அருகே, துப்பாக்கியை காட்டி இளம்பெண்ணை கடத்தி நகை பறித்த, ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


 நீலகிரி மாவட்டம், குன்னுார் ஓட்டுபட்டரை பகுதியை சேர்ந்த சார்லஸ், 32. இவர் குன்னுார் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த அனுசா, 25, என்ற பெண்ணுடன் சேர்ந்து, ஆட்டோவில் முட்டை மற்றும் தேயிலைத் துாள் விற்பனை செய்து வருகிறார். இவர்கள் நேற்று சிம்ஸ் பூங்கா சாலையில், ஆட்டோவில் சென்றுள்ளனர். அங்கு, கோத்தகிரி கட்டபெட்டு பகுதியை சேர்ந்த, 19 வயது பெண் பஸ்சுக்காக காத்து நின்றுள்ளார்.அப்போது, சார்லஸ், ஆட்டோ கட்டபெட்டு போவதாக தெரிவித்து, அவரை அழைத்துள்ளார். ஆட்டோவில், அனுசா இருந்ததால், அந்த பெண் ஆட்டோவில் ஏறியுள்ளார்.


 வாடகையாக, 30 ரூபாயை வாங்கினர்.'ரூட்' மாறிய ஆட்டோ கோத்தகிரி பிரதான சாலையில் செல்லாத அந்த ஆட்டோ, ஆள் நடமாட்டமற்ற ஒதுக்குப்புற சாலையான, ரேலியா அணை வழியாக சென்றதால், ஆட்டோவில் ஏறிய இளம்பெண், சப்தம் போட்டுள்ளார். அப்போது, தனது கையில் இருந்த, 'ஏர்கன்' மற்றும் கத்தியை காட்டி, சார்லஸ் பெண்ணை மிரட்டியுள்ளார்.


  தொடர்ந்து, ஆட்டோ கோத்தகிரி சாலையில் சென்றுள்ளது. அவர் இறங்கவேண்டிய 
கட்டபெட்டு பகுதியில் நிறுத்தாமல், வெஸ்ட்புரூக் குறுக்கு சாலையில், கூக்கல்தொரை பகுதிக்கு ஆட்டோ சென்றுள்ளது.பின்னர், பாதிவழியில் ஆட்டோவை நிறுத்தி, அப்பெண் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். இடது கன்னத்தில், 'ஏர்கன்' கொண்டு சுட்டதுடன், கழுத்தையும் நெரித்துள்ளனர்.


 அவர் வலியால் சப்தம் போடவே, அந்த வழியாக வந்த கூக்கல் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அவருடன் இருந்தவர்கள், ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, இளம்பெண்ணை மீட்டுள்ளனர். தகவல் அறிந்த மக்கள் ஒன்று திரண்டு, ஆட்டோ டிரைவரை, 'கவனித்து' இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


 ஆயுதங்கள் பறிமுதல்வழக்குப்பதிவு செய்த, கோத்தகிரி போலீசார், சார்லஸ், அனுசா ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோ, ஏர்கன், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த பெண்ணுக்கு, கோத்தகிரி அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் கூறுகையில்,'இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதர விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்' என்றனர்.


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments