திட்டம் போட்டு திருடுற கூட்டம்! அலர்ட்டா இருக்கணும்!! - போலீசார் அறிவுறுத்தல்!!

     -MMH


     பெரியநாயக்கன்பாளையம்: மர்ம நபர்கள், உங்கள் கவனத்தை திசை திருப்பி, திருட்டு சம்பவங்களை அரங்கேற்றலாம்; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என, அறிவுரை வழங்கிய, பெரியநாயக்கன்பாளையம் போலீசார், 'வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பது எப்படி' என்பதுகுறித்தும்,பொதுமக்களிடம் விளக்கினர்.


     பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, போதிய போலீசார் இல்லை. இதனால், இரவில் ரோந்து செல்வதில் சிக்கல் நிலவுகிறது.இதை, மர்ம கும்பல், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. வீடுகளை கண்காணிக்கும் கும்பல், வயதானவர்கள் மட்டும் இருந்தால், அவர்களின் கவனத்தை திசை திருப்பி, திருட்டு சம்பவங்களை எளிதாக அரங்கேற்றுகின்றன.இதே போல, சாலையில் நடந்து செல்லும் பெண்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை, பறிந்து செல்வதும் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் திருட்டுகளால் அதிர்ச்சியான போலீசார், பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, அறிவுரை வழங்கி வருகின்றனர்.குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில், மாலை நேரங்களில் செல்லும் போலீசார், அங்கு பொதுமக்களை திரட்டி, சமூக இடைவெளியுடன்அமரவைத்துஅறிவுரைவழங்குகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறிய அறிவுரை:


* விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்களை, வீட்டுக்குள் வைக்க வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தியும், பலர், அதிகளவு நகைகளை வீட்டுக்குள் வைத்து செல்லும் பழக்கத்தில் உள்ளனர்.பொருட்களை பாதுகாப்பாக வைப்பது மற்றும் எச்சரிக்கையாக இருப்பது குறித்து, விழிப்புணர்வு தேவை.


* வீட்டின் கதவு முன்பு, இருபுற தாழ்ப்பாள் கொண்டதாக இருக்க வேண்டும். கிரில் கதவு கூடுதலாக இருந்தால் நல்லது. கதவில், பாதுகாப்பு சங்கிலி பொருத்த வேண்டும். கதவில், லென்சு பொருத்த வேண்டும்.


*பூட்டிய வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், எச்சரிக்கும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில், பாதுகாவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.


* வேலைக்காரர்கள் விபரம் வைத்திருக்க வேண்டும். காஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், பால் இவற்றை கொண்டு வரும் நபர்கள் மீது, சரியான கவனம் செலுத்த வேண்டும்.


*வீட்டை பூட்டி வெளியூர் செல்ல நேர்ந்தால், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அருகில் உள்ள வீட்டினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பகலில், ஏ.சி., பழுது பார்க்க, மற்ற மின்சாதனங்களை பழுது பார்க்க, மெக்கானிக் வரும் சமயத்தில், ஆண்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


* நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறிக் கொண்டு வரும் நபர்களிடம், நகையை கொடுக்க வேண்டாம். அவர்கள் பாலீஷ் போடுவதாக கொண்டு வரும் அமிலம், நகையை கரைக்கக் கூடியதாக இருக்கலாம்.


*வீட்டு சாவியை எக்காரணத்தைக் கொண்டும், வீட்டின் அருகே வைக்கக் கூடாது. வேலைக்காரர்களிடமும் கொடுத்து செல்லக்கூடாது. வீட்டில் உள்ள மதிப்பு மிக்க பொருட்களை, வங்கி லாக்கரில் வைத்து செல்வது நல்லது.வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் போது, உங்கள் மீது ஏதாவது பட்டுள்ளதாகவோ, அரிப்பை ஏற்படுத்தும் ரசாயனம் அல்லது இலையை தடவிவிட்டு அல்லது மற்றும் ஏதாவது ஒரு வகையில் கவனத்தை திசை திருப்பி திருட முயற்சிக்கலாம். இம்மாதிரியான நேரத்தில், விழிப்போடு இருத்தல் வேண்டும்.


* நகை, பணத்தை, இரு சக்கர வாகனம், பெட்ரோல் டாங்க் கவர், இருக்கைக்கு கீழ் உள்ள காலியிடம் ஆகியவற்றில் வைத்து செல்லக் கூடாது. இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவோர், கூடுதலாக பூட்டு ஒன்றினால், வாகனத்தை பூட்டி செல்வது நல்லது.இவ்வாறு, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறினர் பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம் கூறுகையில், ''பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் முக்கிய குடியிருப்புகளில் 'சிசிடிவி' பொருத்தும் பணி நடந்து வருகிறது. அனைத்து குடியிருப்புகளின் முக்கிய இடங்களில், இப்பணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். மீறி நடந்தாலும், குற்றவாளிகளை கைது செய்து, திருட்டுபோன சொத்துக்களை உடனடியாக மீட்க முடியும்,'' என்றார்.


-கிரி,கோவை மாவட்டம்.


.


Comments