உடுமலையில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் திருப்பூர் திட்டத்தில் நடவு!!

     -MMH


     உடுமலையில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்: வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு!!


உடுமலை;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், உடுமலை பகுதியில், 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த, 5 ஆண்டுகளில், 8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், இந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மரச்சாகுபடி திட்டமாக, இயற்கை வேலி, கம்பி வேலி மற்றும் நீர் வசதியுடைய நிலங்களில், மரக்கன்றுகள் நட்டு தரப்படுகிறது.நீர் வசதி குறைவு, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, விவசாயம் மேற்கொள்ளாமல் உள்ள தரிசு நிலங்கள், மலையடிவார பகுதிகள் என, மரக்கன்று நடவு செய்ய ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், கடந்த இரண்டு மாதத்தில், உடுமலை பகுதிகளில், 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நேற்று, ஆண்டியகவுண்டனுார், அமராவதி நகர் சாயப்பட்டறை, அமராவதி டையிங் மில்ஸ் வளாகத்தில், 990 மரக்கன்றுகள் நடப்பட்டன. நில உரிமையாளர் இந்துராணி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் பங்கேற்றனர்.இங்கு, பசுமை, விவசாயிகளுக்கு மரச்சாகுபடியால் வருவாய் கிடைக்கும் வகையிலும், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும், அரிதாகி வரும் மண்ணின் பாரம்பரிய மரங்களை காக்கும் வகையிலும், தேக்கு, புன்னை, நாவல், தான்தோன்றி காய், இலுப்பை, கடம்பை, வேங்கை, குமிழ், ஆயன், நாட்டு அத்தி, நாட்டு புளி, நாட்டு பலா, நாட்டு வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், கள அலுவலரை, 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மதுஹனீப், திருப்பூர்.


Comments