கோவிலில் திருப்பணியை விரைவில் முடிக்கவேண்டும் சிவ பக்தர்கள் கோரிக்கை!

 

-MMH

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள புற்றிடங் கொண்டீசர் கோவிலில் நடந்து வந்த திருப்பணியை அறநிலையத்துறை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என சிவ பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற புற்றிடங்கொண்டீசர் கோவில் கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ளது. 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட வரலாறு கொண்டது. சிவபெருமான் புற்றிடங்கொண்ட நாதராகவும்

அம்பாள் பூங்கோதை நாயகி என்ற பெயரிலும்‌ கோவில் கொண்டிருக்கும் இந்த தலத்தில் பக்தர்களே தீர்த்தம் ஊற்றி வழிபடும் தீர்த்தலிங்கேஸ்வரர் உள்ளது தனிச்சிறப்பு. ஓராண்டுக்கு முன் இந்த கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பாதியில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான பணிகள் முடிவடைந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் கோபுர பாலாலயம் செய்யப்பட்டதோடு பணிகள் தடைபட்டதாக கூறப்படுகிறது. கோபுரம் புதுப்பித்தல் தளம் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசுதல் ஆகிய சிறிய அளவிலான பணிகள் மட்டுமே நிறைவு பெறாமல் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

கோபுரத்திலும் பிறபகுதிகளிலும் வர்ணம் பூசுவதற்காக கோவில் முழுவதும் சாரம் கட்டப்பட்ட நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகத்துக்கு பொறுப்பான அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டதாலும் குரோனா சூழ்நிலையாலும் பணிகள் தடைபட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலக்கப்பட்டுவிட்ட நிலையில் திருப்பணியை‌ மீண்டும் தொடங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பணி செய்ய அறநிலையத்துறை நிதி எதுவும் வழங்க வேண்டியதில்லை எனவும் சிவபக்தர்கள் பணம் செலவழிக்க தயாராக இருக்கின்றனர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.பிரதோஷ நாட்களில் கோவிலுக்குள் சாரம் கட்டி இருப்பதால் நந்தியை சுற்றி வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் விரைவில் திருப்பணியை முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலாலயம் செய்து ஒரு ஆண்டு ஆகியும் கும்பாபிஷேகம் செய்யப்படாததால் வேதனை அடைந்து உள்ள பக்தர்கள் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டும் போதும் என்றும் பக்தர்களே திருப்பணியை நடத்திக் கொள்வர் என்றும் கூறுகின்றனர்.                  

-சுரேந்தர்.

Comments