பெண்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கக்கூடாது!! டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

-MMH 

பெண்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தன்னைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க தனது பெற்றோர் முயற்சிப்பதாக 26 வயது பெண் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தவுல்பூரை சேர்ந்த அப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்க முயற்சித்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் தங்களின் மகள் கடத்தப்பட்டுவிட்டதாக போலீசிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீசார் டெல்லியில் இருந்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, தனக்கு பாதுக்காப்பு அளிக்கும்படி கோரி தனது நண்பர் மூலம் டெல்லி மகளிர் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெற்றோர் தனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை யாரும் கடத்தாத நிலையிலும், ராஜஸ்தான் போலீசார் டெல்லியில் இருந்து வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பெண்ணை வலுக்கட்டாயமாக ராஜஸ்தான் அழைத்துச்சென்றது தவறு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். பிறகு, பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கப்படாது என நீதிமன்றத்திடம் அவரது தந்தை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பெண்ணின் நண்பர் வீட்டுக்கு அவரை அழைத்துச்செல்லும்படி டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

-ஸ்டார் வெங்கட்.      

Comments