அடையாளத்தை இழந்த இயற்கை ஓடைகள்!!!

     -MMH

 உடுமலை:வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், உடுமலை நகரில் இயற்கையாக அமைந்துள்ள மழை நீர் வடிகால்களான ஓடைகளை துார்வார வேண்டும்.உடுமலை நகராட்சியில், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் பள்ளம் என, 12 கி.மீ., துாரம் இயற்கையாக நீர் வெளியேற்றும் நீர் வழித்தடங்கள் உள்ளன.நீர் நிலைகள், ஆக்கிரமிப்புகளால் குறுகியும், ஓடைகள் சாக்கடை கழிவு நீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பைகள் கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளன.இதனால், நகரிலுள்ள ஓடைகள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும் காணப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில், நீர் செல்ல வழியில்லாமல், வழித்தடம் அடைபட்டு ஓடைகள் மாயமாகியுள்ளன.தற்போது, வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல இடங்களில் மழை வெள்ளம் வடிய வழியில்லாமலும், கழிவு நீருடன் சேர்ந்து, குடியிருப்புகளுக்குள் புகுந்து தேங்கி விடுகிறது. அதோடு, நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பு இல்லாமல், மண் மூடியும் காணப்படுகின்றன.லேசான மழை பெய்தாலும், மழை நீர் வெளியேற வழியில்லாமல், ரோடுகளில் ஓடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்வழித்தடங்களையும் மீட்கவும் அதிகாரிகள் களமிறங்காததால், பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.எனவே, நகரில் இயற்கையாக மழை நீர் வடியும் வகையில் அமைந்துள்ள ஓடைகளை துார்வாரவும், ரோடுகள், குடியிருப்புகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை துார்வாரி, நீர் நிலைகளை மீட்டு, வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை காக்கும் வகையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.

Comments