மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை கண்டுகொள்வதில்லை!அடிப்படை வசதிகளில்லாமல் அவதி!!

 

-MMH

மடத்துக்குளம் மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படைவசதிகளை மேம்படுத்தி அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.திண்டுக்கல்-பொள்ளாச்சி அகல ரயில்பாதையில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட பிறகு, படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டது.

ஆனால், தாலுகா தலைமையிடமான மடத்துக்குளத்தில், அமைந்துள்ள ரயில்வே ஸ்டேஷனில், இதுவரை குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை. தற்போது, ஒப்பந்த முறையில் தான் டிக்கெட் வழங்கப்படுகிறது.ஒப்பந்ததாரர், மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரயில்வே துறையினரிடம் சென்று, பல மாதங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்வார்.

அதன் பின்பு அந்த டிக்கெட்டுகளை தினசரி விற்பனை செய்வார்; இந்த அடிப்படையில் தான் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் நிலை உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில், கழிப்பிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் திறக்கப்படவில்லை. முக்கிய ரயில்கள் இங்கு நிற்பதே இல்லை.மடத்துக்குளம் தாலுகா மக்கள் கூறியதாவது: ரயில் வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் டிக்கெட் கொடுக்கப்படும்.

இதனால், ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள் குறித்த நேரத்திற்கு வருவதற்காக பதற்றத்துடனும், அவசரமாகவும் வரும் நிலை உள்ளது.இதற்கு தீர்வாக முன்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும். நீண்ட தொலைவில் இருந்து வரும் பயணிகள் பயன்பாட்டிற்கு, கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். தாலுகா தலைமையக ஸ்டேஷனாக உள்ள இங்கு ஸ்டேஷன் மாஸ்டர் கிடையாது.

வளர்ச்சிக்கும் பாது காப்புக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் நியமிக்க வேண்டும்.சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் பாலக்காடு -- திண்டுக்கல் இடையே இயக்கப்படும் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நின்று சென்றால் மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.விளைபொருட்களை பல நகரங்களுக்கு எடுத்துச் சென்று உரிய விலைக்கு விற்க விவசாயிகளுக்கு பக்கபலமாக ரயில் அமையும்.

இதுகுறித்து ரயில்வே துறையினர் ஆலோசித்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முழுமையான ஸ்டேஷன் ஆக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.தொழில் மேம்படும்மடத்துக்குளம் தாலுகாவிலும், மாவட்ட எல்லையான சாமிநாதபுரத்திலும், நுாற்பாலைகள், காகித ஆலைகள், கறிக்கோழி பண்ணைகள் உட்பட தொழில்கள் அதிகளவு உள்ளது. 

இந்த தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள் பெறுதல், உற்பத்தி பொருளை விற்பனைக்கு அனுப்பும் வகையில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், சரக்குகளை கையாளும் வசதியை ஏற்படுத்தினால், ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும்; தொழில்களும் மேம்படும். இது குறித்தும், மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளையவரலாறுசெய்திக்காக,

-ஹ.மு.முஹம்மது ஹனீப் திருப்பூர்.

Comments