பட்டை தலை வாத்து... பராக்! மாணிக்காபுரம் குளத்தில் வலசை வந்த பறவை!!!

-MMH

திருப்பூர் அடுத்த, மாணிக்காபுரம் குளத்திற்கு, மத்திய ஆசிய நாடுகளில் இருந்து, 'பட்டை தலை வாத்து' வலசை வந்துள்ளன.இருப்பிட சிக்கல், காலநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை போன்ற பல காரணங்களால், சில பறவையினங்கள், அதன் தாய் நிலங்களில் இருந்து, வாழும் சூழல் நிறைந்த இடங்களுக்கு சென்று, திரும்புகின்றன.அவ்வகையில், திருப்பூர் அடுத்த நஞ்சராயன் குளத்திற்கு, ஆண்டுதோறும், அக்., முதல், மார்ச் மாதம் வரை, பல அரியவகை வெளிநாட்டு பறவைகள், வலசை வருகின்றன.தற்போது, தட்டை வாயன், ஊசிவால் வாத்து,- நீலச்சிறகி, கிளுவை, பேதை உள்ளான் என, 14 வெளிநாட்டு பறவையினங்கள் வருகை தந்துள்ளன.

அதில், மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில், இனப்பெருக்கம் செய்து வாழும் சிவப்பு தாரா வாத்துகள், பலரையும் கவர்ந்து வருகிறது. அதே நேரம், ஆண்டு தோறும் இக்குளத்துக்கு வருகை தரும் பட்டை தலை வாத்து, வழக்கத்துக்கு மாறாக, இம்முறை மாணிக்காபுரம் குளத்திற்கு வலசை வந்துள்ளது. அதிக அடி உயரத்தில் பறக்கும் இப்பறவை, 28 ஆயிரம் அடி உயரத்திலான இமயமலையை கடந்து வந்திருப்பதாக, இயற்கை ஆர்வலர்கள் ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர்.திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில், ''மாணிக்காபுரம் குளத்தில், 31 எண்ணிக்கையில் பட்டை தலை வாத்துகள் உள்ளதாக, கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது. ஆண்டுதோறும், நஞ்சராயன் குளத்துக்கு வரும் இப்பறவையினம், மாணிக்காபுரம் குளத்தில் தஞ்சமடைந்துள்ளன. இவை, மத்திய ஆசிய நாடுகளான ரஷ்யா, மங்கோலியா, திபெத் நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளன,'' என்றார்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹ.மு. முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments